Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday 23 November 2014

IT: மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமான வரி விலக்கு உச்சவரம்பு மேலும் உயரக்கூடும்

மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமான வரி விலக்கு உச்சவரம்பு மேலும் உயரக்கூடும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி சூசகமாக தெரிவித்தார். டெல்லியில் பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவர் நேற்று அளித்த பேட்டியில் மேலும் கூறியதாவது: மாதச் சம்பளம் வாங்கும் நடுத்தர மக்கள் நேரடியாக அதிக வருமான வரி செலுத்தி வருகிறார்கள். அவர்களிடம் இருந்து வருமான வரி வசூலிப்பதை குறைத்தால் சம்பளப் பணம் அவர் களுக்கு முழுமையாகச் செல்லும். அவர்கள் அதிகம் செலவும் செய்வார்கள். இதன் மூலம் மறைமுகமாக வரியை பெற்றுக்கொள்ளலாம். அதே நேரம், வரி ஏய்ப்பு செய்பவர்களை தப்பவிடக்கூடாது. அரசுக்கு கிடைக்கும் வரி வருமானத்தில் பாதி அளவுக்கு மறைமுக வரிதான். அதாவது உற்பத்தி வரி, இறக்குமதி வரி, சேவை வரி என பல வரிகள் செலுத்தி வருகிறார்கள். என் உதவியாளர் எந்த அளவுக்கு மறைமுக வரி செலுத்துகிறாரோ, அதே அளவுக்கு நானும் மறைமுக வரி செலுத்துகிறேன். செலுத்தும் அளவுகளில் மாற்றம் இருக்குமே தவிர, நாம் அனைவரும் மறைமுக வரி செலுத்துகிறோம். கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்த பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு தொகை 2 லட்ச ரூபாயிலிருந்து 2.5 லட்ச ரூபாயாக உயர்த்தப்பட்டது. இப்போதைக்கு 2.5 லட்ச ரூபாய் வரை வரி செலுத்த தேவை இல்லை. மற்ற இதர விலக்குகளை சேர்த்துக்கொண்டால் 3.5 லட்சம் முதல் 4 லட்ச ரூபாய் வரை வரி இல்லாமல் சமாளிக்கலாம். 35,000 ரூபாய் முதல் 40,000 ரூபாய் வரை சம்பளம் வாங்கும் நபர், சரியான சேமிப்பை செய்தால் அவர் வரி கட்டத் தேவை இல்லை. ஆனால், வாடகை, குழந்தைகளின் செலவு ஆகிய காரணங்களால் இந்த எல்லைக்குள் இருப்பவர்கள் பலரால் சேமிக்க முடியவில்லை. மேலும் வரி மூலம் கிடைக்கும் வருமானத்தை அதிகரிக்க, தற்போது இருக்கும் வருமான வரிவிலக்கு உச்சவரம்பை குறைக்கும் திட்டம் இல்லை. அது சரியான வழியும் அல்ல. இந்த நிலையில், அரசுக்கு வருமானம் அதிகரிக்கும் பட்சத்தில் இந்த விலக்கினை இன்னும் அதிகரிக்கலாம். நானும் அதைத்தான் விரும்புகிறேன். ஆனால் தற்போதைய அரசின் வருமான சூழ்நிலையில் இது சவாலான விஷயம். கடந்த முறை என்னுடைய எல்லைகளை தாண்டியும் பல சலுகைகளை வழங்கினேன். நேரடியாக வருமான வரியாக வசூல் செய்வதை விட, அவர்கள் செலவழிக்கும் பட்சத்தில் பொருளாதார பரிவர்த்தனைகள் அதிகரித்து, மறைமுக வரி வருவாய் உயரும். கிசான் விகாஸ் பத்திரம் கிசான் விகாஸ் பத்திரங்களை மீண்டும் அறிமுகம் செய்திருப்பது கருப்புப் பணத்தை ஊக்குவிப்பதுபோல் அமைந்துள்ளது என்று சில கட்சிகள் அச்சம் தெரிவித்திருப்பது தேவையற்றது. அந்தப் பத்திரத்தை வாங்கும் முதலீட்டாளர்கள் தங்களின் பெயர், விலாசம், பான் அட்டை எண்ணை கண்டிப்பாக அளிக்க வேண்டும். எனவே இந்தப் பத்திரத்தில் முறைகேடுகள் செய்ய முடியாது. தீவிரவாத அமைப்புகள் கிசான் விகாஸ் பத்திரங்களை வாங்கக்கூடும் என்று எழுப்பப்படும் அச்சங்களும் தேவையற்றது. அப்படி நடப்பதற்கு வாய்ப்பில்லை. இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளன. மகாராஷ்டிரம், ஹரியாணா தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்துள்ளது. ஜம்மு-காஷ்மீர், ஜார்க்கண்ட் சட்டப்பேரவை களத்தில் காங்கிரஸ் கடும் போராட்டங்களை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக மத்திய அரசுக்கு எதிராக அந்தக் கட்சி அவதூறான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது. இவ்வாறு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறினார்.

No comments: