Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday 23 November 2014

அரசு நிதி உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கான ஊதியத்தை நிர்வாகத்திடம் வழங்க உத்தரவு

அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான ஊதியத்தை பள்ளி நிர்வாகத்திடமே வழங்க வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுதொடர்பாக, புரசைவாக்கத்தில் உள்ள சர்.சி.எம்.டி.முத்தையா செட்டியார் ஆண்கள் பள்ளியின் தாளாளர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:
எங்கள் பள்ளிக்கு அரசு நிதி உதவி வழங்கப்படுகிறது. இங்கு பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கான ஊதியம் அரசிடமிருந்து நேரடியாகவே அவர்களுக்கு வழங்கப்படுகிறது. அவ்வாறு வழங்காமல், பள்ளி நிர்வாகத்திடமே ஊதியத்தை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி வெ.ராமசுப்பிரமணியன் பிறப்பித்த உத்தரவு:
கடந்த 2011-ஆம் ஆண்டு பள்ளி நிர்வாகத்துக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால், இருவருக்கும் இடையே பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன.
எனவே, கடந்த 2012-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கான ஊதியம் அவர்களிடம் நேரடியாக வழங்கப்படும் என மாவட்டக் கல்வி அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் (ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ், பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கான ஊதியம் சம்பந்தப்பட்ட பள்ளிச் செயலாளரிடமே வழங்கப்பட வேண்டும். இதற்கு முழு அதிகாரம் படைத்தவர் மாவட்டக் கல்வி அதிகாரிதான்.
இதை நடைமுறைப்படுத்தாதது அவர் செய்த தவறாகும். தாங்கள் நினைப்பதைத்தான் நிர்வாகம் செய்ய வேண்டும் என ஆசிரியர்களும், ஊழியர்களும் நினைக்கக் கூடாது. கல்வி அதிகாரிகளும் அதை அனுமதிக்கக் கூடாது.
எனவே, மனுதாரர் பள்ளியின் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கான ஊதியத்தை பள்ளி நிர்வாகத்திடமே வழங்க வேண்டும் என நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.

No comments: