2015-16 கல்வியாண்டுக்கான மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை கலந்தாய்வில் அகில இந்திய ஒதுக்கீட்டில் காலியாக உள்ள இடங்களை அந்தந்த மாநிலங்களே ஒரு வாரத்துக்குள் நிரப்பிக் கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2015-16 கல்வியாண்டில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்காக அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்திருந்த கிருத்திகா நிகாம், ஆர்.சந்தோஷ், ராகுல் குமார் சர்மா உள்ளிட்ட மாணவர்கள், தங்களுக்கு இடம் கிடைக்காத நிலை உள்ளதாகக் கூறி உச்ச நீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஆர்.எஃப். நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்திய மருத்துவக் கவுன்சில் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் கெüரவ் சர்மா, "உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ், மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கான கலந்தாய்வு நடத்தப்பட்டது. எனினும், பல மாநிலங்களில் இந்த ஒதுக்கீட்டின் கீழ் சுமார் 500-க்கும் மேற்பட்ட இடங்கள் காலியாக உள்ளன. எனவே, அந்த இடங்களை அந்தந்த மாநில அரசுகளே நிரப்பிக் கொள்ள உத்தரவிட வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படாமல் மீதமுள்ள இடங்களை ஒரு வாரத்துக்குள் அந்தந்த மாநிலங்களே நிரப்பிக் கொள்ள அனுமதி அளிக்கிறோம். அதன் நிலவர அறிக்கையை நீதிமன்றத்துக்கு மத்திய அரசு தெரிவிக்க வேண்டும்' என்று குறிப்பிட்டு அடுத்த விசாரணையை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
முன்னதாக, மேற்கண்ட மனு மீதான விசாரணை கடந்த செப்டம்பர் 28-ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது நீதிபதிகள், "ஆண்டுதோறும் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைமுறைகளை செப்டம்பர் 30-க்குள் முடிக்க வேண்டும். அதிலும் இடங்கள் நிரப்பப்படாவிட்டால் மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து கூடுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும்' என உத்தரவிட்டது.
இந்த காலக்கெடு முடிவடைந்த நிலையில், தற்போது காலியாக உள்ள அகில இந்திய ஒதுக்கீடுக்குரிய இடங்களை மாநிலங்களே நிரப்பிக் கொள்ள உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
4, 5-இல் நான்காம் கட்டக் கலந்தாய்வு
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டிலிருந்து சமர்ப்பிக்கப்படும் 63 இடங்கள் உள்பட காலியிடங்களை நிரப்புவதற்கான 4-ஆம் கட்டக் கலந்தாய்வு வரும் ஞாயிற்றுக்கிழமை (அக்.4), திங்கள்கிழமை (அக்.5) ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற உள்ளன. சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை அரங்கில் கடந்த செப்டம்பர் 26. 27 ஆகிய தேதிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். 3-ஆம் கட்டக் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் சேர்க்கைக் கடிதம் பெற்ற மாணவர்கள் உரிய கல்லூரிகளில் புதன்கிழமைக்குள் (செப்.30) சேர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர்.
காலியிடங்களை நிரப்ப... எனவே உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை (அக்.1) பிறப்பித்த உத்தரவின்படி அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 63 எம்.பி.பி.எஸ். இடங்கள், அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 7 பி.டி.எஸ். இடங்கள், 3-ஆம் கட்டக் கலந்தாய்வில் சேர்க்கைக் கடிதம் பெற்று கல்லூரியில் சேராத மாணவர்கள் காரணமாக ஏற்பட்டுள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். காலியிடங்கள், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 111 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்கள் ஆகியவை அக்டோபர் 4, 5 தேதிகளில் நடைபெறும் 4-ஆம் கட்டக் கலந்தாய்வில் நிரப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment