2015 ஜூன் மாதம் நடத்தப்பட்ட "நெட்' தேர்வுக்கான முடிவை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) வெளியிட்டுள்ளது. அத்துடன், கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கான தேசிய அளவிலான தகுதித் தேர்வுக்கான அறிவிப்பையும் சி.பி.எஸ்.இ. வெளியிட்டுள்ளது.
இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற நவம்பர் 1-ஆம் தேதி கடைசி நாளாகும். நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியில் சேருவதற்கான தகுதியைப் பெறுவதற்கும், உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெற தகுதி பெறுவதற்கும் தேசிய தகுதித் தேர்வு (நெட்)- நடத்தப்படுகிறது.
ஆண்டுக்கு இரு முறை ஜூன், டிசம்பர் மாதங்களில் நடத்தப்படும் இந்தத் தகுதித் தேர்வுக்கான அறிவுப்பு முறையே, மார்ச், செப்டம்பர் மாதங்களில் வெளியிடப்படும்.
மொத்தம் 84 பாடங்களின் கீழ் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது. நாடு முழுவதும் 89 பெரிய நகரங்களில் அமைந்துள்ள தேர்வு மையங்களில் இந்தத் தேர்வு நடத்தப்படும். தற்போது 2015 டிசம்பர் மாத தேர்வுக்கான அறிவிப்பை சி.பி.எஸ்.இ. வெளியிட்டுள்ளது. தேர்வானது டிசம்பர் 27-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது.
இதற்கு www.cbsenet.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்-லைனில் மட்டுமே விண்ணப்பத்தைப் பதிவு செய்ய வேண்டும். அக்டோபர் 1-ஆம் தேதி முதல் விண்ணப்பத்தைப் பதிவு செய்யலாம்.
விண்ணப்பிக்க நவம்பர் 1 கடைசி தேதியாகும். கட்டணத்தைச் செலுத்தியதற்கான வங்கி செலுத்து சீட்டை ("சலான்') பதிவிறக்கம் செய்யவும், வங்கிகளில் கட்டணத்தைச் செலுத்தவும் நவம்பர் 2 கடைசித் தேதியாகும்.
தேர்வு முடிவு: கடந்த ஜூன் மாதம் நடத்தப்பட்ட "நெட்' தேர்வுக்கான முடிவை சி.பி.எஸ்.இ. வெளியிட்டுள்ளது. இதனை சி.பி.எஸ்.இ. இணையதளத்தில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment