ஆசிரியர்கள், தங்கள் பணியை சேவையாகக் கருதினால் 100 சதவீத தேர்ச்சியை அளிக்க முடியும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் தெரிவித்தார்.
கடலூர், அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் 80 சதவீதத்துக்கும் குறைவாக தேர்ச்சியளித்த அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கான மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம், கடலூரில் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தொடக்கிவைத்தார். இதைத் தொடர்ந்து, நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் பேசியதாவது:
அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சிபெற வேண்டுமென அரசு விரும்புகிறது. ஏனெனில், கல்விக்காக அரசு அதிகமான நிதியை செலவிடுவதால், அதற்கான பலனை எதிர்பார்க்கிறது. மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஒழுக்கத்தையும், பண்பையும் கற்றுக்கொடுக்க வேண்டும். ஆசிரியர்கள், தங்கள் பணியை சேவையாகக் கருதினால் 100 சதவீத தேர்ச்சியை அளிக்க முடியும்.
குழந்தைகள் மன ரீதியாகவும், அறிவு ரீதியாகவும் வளர்வது பள்ளியில்தான். ஆசிரியர்களின் பேச்சு, நடத்தை, அவர்களின் உடை ஆகியவையை மாணவர்கள் முன்மாதிரியாகக் கருதுகிறார்கள். எனவே, ஆசிரியர்கள் அதற்கேற்றார்போல நடந்துகொள்ள வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment