அக்டோபர் 1984. இந்திரா காந்தி இறந்தபோது ‘தி இந்து’ஆங்கில நாளிதழில் வந்த தலைப்புச் செய்தி ‘இந்திரா காந்தி அசாசினேட்டட்’ (Indira Gandhi Assassinated). அதற்கு முன் அசாசினேஷன் என்ற சொல் இருந்திருந்தாலும், இந்தியாவில் அப்போதுதான் பலருக்கும் அச்சொல் தெரியவந்தது. இச்சொல்லுக்கு அரசியல் அல்லது சமய காரணங்களுக்காக (ஒரு முக்கியமான நபரை) கொலைசெய்தல் என்பது பொருள். 1981வாக்கில் எகிப்து அதிபர் அன்வர், கெய்ரோவில் சுட்டுக்கொல்லப்பட்டபோது, இந்தச் சொல்லை முதன்முதலாகப் பார்த்த நினைவு எனக்கு.
ஆகஸ்ட் 1997. டயானா இறந்தபோது செய்தித்தாள்களில் பிரபலமான சொல் ‘பப்பரஸி’ (paparazzi). ஆர்வத்தைத் தூண்டும் புகைப்படங்களை எடுத்து, செய்தித்தாள்களுக்குத் தருவதற்காகப் பிரபலங்களைப் பின்தொடர்ந்து செல்லும் புகைப்படக்காரர் என்பது இச்சொல்லுக்கான பொருள்.
அகராதியில் இருந்தால்கூடப் பயன்பாட்டில் அதிகமாக வரும்போதோ, பிரபலமாகும்போதோ, ஒரு குறிப்பிட்ட நிகழ்வின் பின்னணியிலோ ஒரு சொல் முக்கியத்துவம் பெறுகிறது. அவ்வாறே அந்தந்தக் காலகட்டத்தில் புதிய சொற்கள் உருவாகின்றன. அவ்வகையில், 2013-ல் முக்கிய இடத்தைப் பெறும் சொல் ‘செல்ஃபி’ (Selfie). இச்சொல் அவ்வாறான இடத்தைப் பெற்ற சூழல் சுவாரஸ்யமானது.
திரும்பிப் பார்க்க ஒரு வரலாறு
எளிதாக எடுத்துச் செல்லக்கூடிய கோடாக் பிரௌனி பெட்டிக் கேமரா அறிமுகமானபோது, தன்னைத்தானே புகைப்படம் எடுத்துக்கொள்ளும் முறை இருந்துள்ளது. இக்காலகட்டத்தில் எட்வர்ட் பெண்மணி ஒருவர் நிலைக்கண்ணாடி உதவியுடன் தன்னைத்தானே புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். 1900-ல் நடந்தது இது.
கண்ணாடி, கேமராவின் துணையுடன் முதன்முதலாக ரஷ்யாவின் அண்டாசியா நிகோவ்லேவ்னா தன் 13-வது வயதில் புகைப்படம் எடுத்து, அதைத் தன்னுடைய கடிதத்துடன் தோழிக்கு அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் அவர் அந்தப் புகைப்படத்தைக் கண்ணாடியைப் பார்த்துக்கொண்டு தானாகவே எடுத்ததாகவும், அவ்வாறு எடுத்தபோது தன் கைகள் நடுங்கியதாகவும் கூறியுள்ளார். 1914-ல் நடந்தது இது.
‘ஃபேஸ்புக் கலாச்சாரம்’ பரவுவதற்கு முன்பாகவே தன்னைத்தானே புகைப்படம் எடுத்துக்கொள்ளுதல் அதிகமாக ‘மைஸ்பேஸ்’-ல் காணப்பட்டது. இது 2000 கதை.
ஆஸ்திரேலிய இணைய அமைப்பில் (ABC Online) இச்சொல் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டது. இது 2002 கதை.
‘ஃபிளிக்கர்’ தளத்தில் புகைப்படப் பகிர்வில் இச்சொல் இடம்பெற்றது 2004-ல்.
இச்சொல்லைப் பற்றி புகைப்படக்காரர் ஜிம் கிராஸ் விவாதிக்கிறார் 2005-ல்.
இளம் பெண்களால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ‘ஃபிளிக்கர்’ தளத்தில் பிரபலமாக இச்சொல் புழக்கத்தில் பரவுகிறது 2009-ல்.
கொரிய மற்றும் ஜப்பானிய செல்பேசியைக் கொண்டும் ‘இன்ஸ்டாகிராம்’ மூலமாகவும் எடுக்கப்பட்டு, ஐபோன் வழியாக நகலெடுக்கப்பட்டபோது, தானாக எடுக்கப்படும் புகைப்படங்கள் அதிகமாகப் பயன்பாட்டுக்கு வர ஆரம்பித்தன. முதலில் இளைஞர்களிடம் பிரபலமாக இருந்த இம்முறை, நாளடைவில் எல்லோரிடமும் பரவுகிறது 2010-ல்.
மிகச் சிறந்த சொற்களில் ஒன்றாக ‘டைம்’ இதழால் இச்சொல் தேர்ந்தெடுக்கப்படுகிறது. நாளடைவில் அதன் பயன்பாடு உச்சத்தில் வர ஆரம்பித்தது 2012-ல்.
மே-நவம்பர் 2013. கரென் ந்யேபெர்க் விண்வெளியில் இருந்தபோது ‘செல்ஃபி’ எடுத்துள்ளார். விண்வெளியில் இருக்கும்போது தலைமுடியை எப்படிச் சுத்தம் செய்துகொள்வது என்றுகூட அவர் அப்போது செய்துகாட்டினார்.
ஜூலை 2013. டிசைனர் மற்றும் நடிகை ரிகன்னா தன்னைத்தானே இலக்கு வைத்து எடுத்த ‘செல்ஃபி’உலகின் மிசச்சிறந்த புகைப்படமாகக் கருதப்படுவதாக இங்கிலாந்தில் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பின் வழி அறிய முடிந்தது.
ஆகஸ்ட் 2013. இளைஞர்களுடன் போப் எடுத்துக்கொள்ளும் ‘செல்ஃபி’ உலகப் பிரபலமானது.
நவம்பர் 2013. ஆக்ஸ்போர்டு அகராதிகளின் சிறந்த சொல்லாக ‘செல்ஃபி’ தேர்ந்தெடுக்கப்படுகிறது. “இந்த ஆண்டில் சிறந்த சொல்லாக இருக்க அச்சொல் கடந்த 12 மாதங்களுக்குள்தான் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும் என்றோ, அது நீண்ட நாள்களாக இருந்திருக்க வேண்டுமென்றோ அவசியமில்லை” என்கிறார் ஆக்ஸ்போர்டு அகராதிகளின் ஆசிரிய இயக்குநர் ஜுடி பியர்சல். இச்சொல்லின் பயன்பாடு வியக்கத்தக்க வகையில் 17,000 விழுக்காடு இருந்ததாக ஆக்ஸ்போர்டு அகராதி ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
டிசம்பர் 2013. நெல்சன் மண்டேலா இறுதி மரியாதைச் சடங்கின்போது, அமெரிக்க அதிபர் எடுத்துக்
கொண்ட ‘செல்ஃபி’ படம் உலகம் முழுவதும் பத்திரிகைகளில் வெளியாகி ‘செல்ஃபி’யை உலகம் முழுக்கப் பரப்பியது.
புதிதாகப் பிறக்கும் சொற்கள்
இப்போது ‘செல்ஃபி’யைப் போல மேலும் பல சொற்கள் விஸ்வரூபம் எடுக்கின்றன. ‘ஹெல்ஃபி’(தன் தலைமுடியை புகைப்படமெடுத்தல்), ‘பெல்ஃபி’(தன் பின் புறத்தைப் புகைப்படமெடுத்தல்), ‘லெல்ஃபி’(தன் கால்களைப் புகைப்படமெடுத்தல்), ‘வெல்ஃபி’(உடற்பயிற்சி செய்யும் நிலையில் புகைப்படமெடுத்தல்), ‘ட்ரெல்ஃபி’(குடித்த நிலையில் புகைப்படமெடுத்தல்) என்று வரிசை கட்டி நிற்கின்றன இந்தச் சொற்கள்.
தமிழில் எந்த வார்த்தை?
ஆங்கில மொழியைப் புகழும்போதோ, இகழும்போதோ, ஒப்பிடும்போதோ ஒரு விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ள மறக்கிறோம். ஆங்கிலம் உலகெங்கும் பரவக் காரணம், மொழியோடு அந்தச் சமூகம் கொண்டிருக்கும் இந்தப் பிணைப்புதான். ஒரு சமூகமே சேர்ந்துதான் ஒரு மொழியை வளப்படுத்த முடியும்; வெறும் பண்டிதர்களும் பாடநூல் ஆசிரியர்களும் மட்டும் அல்ல. மொழிக்கு மேல்நாட்டுச் சமூகம் கொடுக்கும் மதிப்பின் அடையாளம்தான் ‘செல்ஃபி’ என்ற ஒரு வார்த்தை கடந்திருக்கும் பயணம். தமிழில் இப்படி எல்லாம் மொழியைப் பற்றி நாம் பேசுகிறோமா, எழுதுகிறோமா, குறைந்தபட்சம் சிந்திக்கிறோமா? வாசிப்போடும் எழுத்தோடும் முக்கியமாகப் புத்தகங்களோடும் நெருக்கமான உறவைப் பராமரிக்கும் ஒரு சமூகமே மொழியை வாழ்வாங்கு வாழவைக்க முடியும்.
தமிழில் இதுவரை இப்படி எல்லாம் சிறந்த சொற்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லை. மொழி மீது நாம் ஒவ்வொருவரும் அக்கறை காட்டினால், அடுத்த ஆண்டு ஒரு சொல் தேர்ந்தெடுக்கப்படலாம்!
பா.ஜம்புலிங்கம், முனைவர், தமிழ்ப் பல்கலைக்கழகக் கண்காணிப்பாளர், தொடர்புக்கு: drbjambulingam@gmail.com
No comments:
Post a Comment