வரலாறு, புவியியல் பாடங்களை பள்ளிக் குழந்தைகள் எளிதாக படிக்கும் வகையில் ஒவ்வொரு வகுப்பறையிலும் சுவர் வரைபடங்கள் (வால் மேப்) ஒட்டப்பட உள்ளன. இதற்காக 35 ஆயிரம் அரசுப் பள்ளிகளுக்கு வரும் ஜனவரியில் சுவர் வரைபடங்கள் வழங்கப்பட உள்ளன.
பள்ளிப் பாடத்திட்டத்தில் வரலாறு, புவியியல் பாடம் முக்கிய இடத்தை வகிக்கிறது. 3-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை சமூக அறிவியல் என்ற பெயரில் வரலாறு, புவியியல் பாடம் இடம்பெறுகிறது. மேல்நிலைக் கல்வியில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பில் குறிப்பிட்ட பிரிவுகளுக்கு மட்டும் வரலாறு, புவியியல் பாடங்கள் உண்டு.
வரலாறு, புவியியல் பாடங்களில் மன்னர்களின் ஆட்சி எல்லைப் பகுதி, முக்கிய அமைவிடங்கள், நிலப்பரப்பு, கடல்கள், ஆறுகள், தட்பவெப்ப நிலை, விவசாயம், பயிர்கள் போன்றவை குறித்து எளிதாக அறிந்துகொள்ள வரைபடங்கள் பெரிதும் உதவும்.
வரலாறு, புவியியல் வரைபடங்கள்
அதுமட்டுமல்லாமல் வரைபடங்கள் தொடர்பாக வினாக்களும் தேர்வில் கேட்கப்படுகின்றன. இந்தக் கேள்விகளுக்கு சரியாக விடையளித்தால் முழு மதிப்பெண் வழங்கப்படும் என்பதால் மாணவர்கள் இதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். குறிப்பாக 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதுவோர், வரைபடம் பகுதியில் கூடுதல் கவனம் செலுத்துவர். தேர்வுக்கு மட்டுமின்றி பொது அறிவை வளர்ப்பதிலும் வரைபடங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு.
இந்நிலையில், 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் சமூக அறிவியல் பாடத்தை நன்கு புரிந்து படிக்கும் வகையில், பள்ளிகளில் சுவர் வரைபடங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 35 ஆயிரம் அரசுப் பள்ளிகளுக்கு சுவர் வரைபடங்களை வழங்க அரசு ஏற்பாடு செய்துள்ளது. இவை ஒவ்வொரு வகுப்பறையிலும் ஒட்டப்படும். இந்தியா, தமிழ்நாடு, மாவட்டம் என 3 வகைகளாக வரைபடங்கள் அமைந்திருக்கும்.
ஜனவரியில் விநியோகம்
லேமினேஷன் செய்யப்பட்ட இந்த வரைபடங்களில் அனைத்து விவரங்களும் தமிழில் குறிப்பிடப்பட்டிருக்கும். அரசு மற்றும் ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளுக்கு மட்டுமே வரைபடங்கள் வழங்கப்படும். வரைபடங்கள் தயாரிப்புக்கான பணியில் அரசு நிறுவனமான தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்விப் பணிக் கழகம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. வரைபடங்களை ஜனவரி மாத இறுதியில் பள்ளிகளுக்கு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
No comments:
Post a Comment