உச்ச நீதிமன்ற தீர்ப்பின் காரணமாக இதுவரை அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) கட்டுப்பாட்டின்கீழ் இயங்கிவந்த பொறியியல், தொழில்நுட்ப கல்லூரிகள் இனி பல்கலைக்கழக மானியக்குழுவின் (யுஜிசி) கீழ் வந்துள்ளன.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் கடந்த ஏப்ரல் 25-ம் தேதி வெளியிட்ட தீர்ப்பின் விவரம்:
ஏஐசிடிஇ சட்டம் 1987 பிரிவு 2(ஹெச்)-ன் படி ஒரு பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்பு பெற்றுள்ள கல்லூரிகள் "தொழில்நுட்ப நிறுவனம்" என்ற வரம்புக்குள் வராது.
மாறாக, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக வரம்புக்குள்தான் இணைப்புக் கல்லூரிகள் அனைத்தும் வரவேண்டும். எனவே, யுஜிசி-தான் இந்தக் கல்லூரிகளுக்குமான தகுந்த வழிகாட்டுதல்கள் மற்றும் கட்டுப்பாடுகளை வகுக்க வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து, பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளுக்கான வரைவு வழிகாட்டுதல்களை யுஜிசி தயார் செய்துள்ளது. மேலும், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பிறரிடமிருந்து இதுதொடர்பாக கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைப் பெறுவதற்காக வரைவு வழிகாட்டுதல்களை இணையதளத்திலும் வெளியிட்டுள்ளது.
இந்த ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களை வரும் திங்கள்கிழமைக்குள் (டிச.9) யுஜிசி இணைச் செயலர் கே.பி. சிங்குக்கு இ-மெயில் மூலமோ அல்லது தபால் மூலமோ அனுப்பி வைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment