அரசு அனுமதியின்றி புது படிப்புகளை கல்லூரிகள் தொடங்கக் கூடாது என துணைவேந்தர்கள் ஆய்வுக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
உயர் கல்வித்துறை அமைச்சர் பி. பழனியப்பன் தலைமையில் துறையின் ஆய்வுக்கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் அனைத்துப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள், உயர் கல்வித்துறை செயலர் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், பல்கலைக்கழகங்களில் உள்ள நிர்வாகப் பிரச்னைகள், துணைவேந்தர்கள் மீது முதல்வரின் சிறப்புப் பிரிவுக்கு வந்த புகார்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், தணிக்கை முடிவுகள் உள்ளிட்ட விவகாரங்கள் முக்கியமாக ஆலோசிக்கப்பட்டதாக துணவேந்தர்கள் தெரிவித்தனர்.
மேலும், பாடத் திட்டங்களை மேம்படுத்துவது, மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள அனைவருக்கும் உயர்கல்வித் திட்டத்துக்கான (ரூசா) நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்வது ஆகியவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
அதோடு, அனைத்து கல்லூரிகளிலும் ஒருங்கிணைந்த பாடத்திட்டத்தை கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள், சர்வதேச தொடர்பு மையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் ஆகியவற்றை விரைவுபடுத்தவும் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதோடு, அனைத்து பல்கலைக்கழகங்களும் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தியதாகவும் கூட்டத்தில் பங்கேற்ற துணைவேந்தர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அமைச்சர் பி. பழனியப்பன் கூறியது:
ஆய்வுக் கூட்டத்தில் உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்துவது, பாடத் திட்ட மேம்பாடு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், இணைப்பு கல்லூரிகள் மற்றும் தன்னாட்சிக் கல்லூரிகள் புதிய படிப்புகளைத் தொடங்கும்போது அரசின் அனுமதியை கட்டாயம் பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது என்றார்.
No comments:
Post a Comment