அரசுக் கல்லூரிகளில் காலியிடங்கள் இருந்தும் கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகம் பணியிட மாறுதல் அளிக்க மறுத்துவிட்டது என பேராசிரியர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் உள்ள 80 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கான கலந்தாய்வு அக்டோபர் 27-ஆம் தேதி தொடங்கி, 31-இல் வரை நடைபெறுகிறது.
நிபந்தனை தளர்த்தப்பட்டும் பலனில்லை? வழக்கமாக, புதிதாக நியமிக்கப்படும் பேராசிரியர்களின் இரண்டு ஆண்டுகள் பணி நிறைவு பெற்றதும், பணி மூப்பு அடிப்படையில் பொதுக் கலந்தாய்வு மூலம் இடமாறுதல்கள் வழங்கப்படும். ஆனால், இந்த நிபந்தனை தளர்த்தப்பட்டதால், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வாகி 2015-இல் நியமனம் பெற்றவர்களும் விண்ணப்பித்தனர்.
இந்த நிலையில், கலந்தாய்வில் குளறுபடி நடைபெறுவதாகவும், சொந்த ஊருக்கு பணியிட மாறுதல் கிடைக்கும் என்ற ஆவலில், கைக் குழந்தையுடன் சென்னைக்கு வந்த பல பெண் பேராசிரியர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக, 2015-இல் பணியில் சேர்ந்தவர்களே பாதிப்புக்கு ஆளாகியிருப்பதாக பெண் பேராசிரியர்கள் கூறினர்.
"நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்பு': இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது: இடமாறுதலுக்கு விண்ணப்பிக்கும் பேராசிரியர், அவர் பணிபுரியும் கல்லூரியில் பேராசிரியர் பணியிடங்கள் 50 சதவீதத்துக்கு மேல் பூர்த்தியாகியிருக்க வேண்டும். அடுத்ததாக, கேட்கக் கூடிய கல்லூரியில் காலியிடம் இருக்க வேண்டும்.
இந்த இரண்டு நிபந்தனைகளும் பூர்த்தியாகியபோதும், பலருக்கு இடமாறுதல் அளிக்க கல்லூரிக் கல்வி இயக்குநர் அலுவலகம் மறுத்துவிட்டது. நூற்றுக்கும் மேற்பட்டோர் இதுபோன்று பாதிக்கப்பட்டுள்ளோம் என்றனர்.
"சிலருக்கு மாறுதல்; பலருக்கு மறுப்பு': இதுகுறித்து தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் மன்ற பொதுச் செயலாளர் சிவராமன் கூறியது: புதிதாக நியமனம் பெற்றவர்களில் குறிப்பிட்ட நபர்களுக்கு இடமாறுதலை அளித்த இயக்குநர் அலுவலகம், பலருக்கு இடமாறுதல் அளிக்க மறுத்துள்ளது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. தேவையற்ற சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நிபந்தனைகளை நிறைவு செய்யக் கூடிய புதிய பேராசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்க இயக்குநர் அலுவலகம் முன்வர வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment