கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.
இந்தத் தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான இந்தத் தேர்வை தமிழகத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் எழுதியிருந்தனர்.
நாடு முழுவதும் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர் ஆயிரம் பேருக்கு போட்டித் தேர்வு நடத்தி உயர் கல்விக்கான கல்வி உதவித் தொகையை மத்திய அரசு வழங்குகிறது. இதற்கான தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டத் தேர்வு தமிழகம் முழுவதும் 350 மையங்களில் நவம்பர் 2-ஆம் தேதி நடைபெற்றது.
முதல் கட்டத் தேர்வில் தேர்வு பெறும் மாணவர்களுக்கு, தேசிய கல்வி ஆராய்ச்சி-பயிற்சிக் கவுன்சில் சார்பில், இரண்டாம் கட்டத் தேர்வு அடுத்த ஆண்டு மே 10-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த இரண்டு கட்டங்களிலும் தேர்வு பெறும் மாணவ, மாணவியருக்கு பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் போது மாதம் ரூ.1,250-ம், இளநிலை, முதுநிலைப் பட்டப் படிப்பின் போது மாதம் ரூ.2 ஆயிரமும் உதவித் தொகை வழங்கப்படும். ஆராய்ச்சிப் படிப்பின்போது வழங்கப்படும் உதவித் தொகை பின்னர் நிர்ணயிக்கப்படும்.
No comments:
Post a Comment