அரசுப் பள்ளிகளின் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களில் இந்த ஆண்டு சுமார் 600 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த 2013-14, 2014-15-ஆம் கல்வியாண்டுகளில் காலியான 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்காக, 2014-ஆம் ஆண்டு நவம்பரில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான போட்டித் தேர்வு இந்த ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி நடத்தப்பட்டு, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர்.
இந்த ஆண்டுக்கான காலிப் பணியிடங்கள், நியமனம் தொடர்பாக சட்டப் பேரவையில் அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்த நிலையில், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களில் இந்த ஆண்டு 500 முதல் 600 காலியிடங்கள் உள்ளதாக கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டியுள்ளது. அதன்பிறகு, இதுதொடர்பான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பின்னர் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டதும், இதற்கான நடவடிக்கைகளை ஆசிரியர் தேர்வு வாரியம் தொடங்கும்.
பெரும்பாலும், கடந்த ஆண்டு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு நடைபெற்ற அதேகாலத்திலேயே இந்த ஆண்டும் போட்டித் தேர்வு நடைபெற வாய்ப்புள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
விவசாயத் துறை பணியிடங்களை நிரப்புவதில் தாமதம்: பள்ளிக் கல்வித் துறைக்கு விவசாயத் துறையில் பட்டம் பெற்ற 25 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். இதுதொடர்பாக அரசாணை உள்ளிட்டவை பிறப்பிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகின்றன. இருப்பினும், இந்தப் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று பட்டதாரிகள் வேதனையுடன் கூறுகின்றனர். இந்தப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதும் அவர்களின் எதிர்பார்ப்பு.
No comments:
Post a Comment