யுஜிசி வழிகாட்டுதல் 2010-இல் குறிப்பிடப்பட்டுள்ள குறைந்தபட்ச கல்வித் தகுதியில் எந்தவித மாற்றமும் செய்யாமல், பல்கலைக்கழக, கல்லூரி ஆசிரியர்களுக்கான தகுதியை மாநில அரசுகள் தேவைப்பட்டால் உயர்த்திக் கொள்ளலாம் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) விளக்கம் அளித்துள்ளது.
பல்கலைக்கழகம், கல்லூரிகளில் ஆசிரியர் நியமனத்துக்கு யுஜிசி 2010 வழிகாட்டுதலில் நிர்ணயிக்கப்பட்டுள்ள தகுதிகள் தொடர்பாக கல்வியாளர்கள், மாநில உயர்கல்வித் துறை அதிகாரிகள் எழுப்பியுள்ள பல்வேறு சந்தேகங்களுக்கு யுஜிசி விளக்கம் அளித்துள்ளது.
www.ugc.ac.in என்ற இணையதளத்தில் இந்த விளக்கம் இடம்பெற்றுள்ளது.
அதில், பல்கலைக்கழக, கல்லூரி ஆசிரியர் நியமனத்தில் யுஜிசி வழிகாட்டுதலை பின்பற்றுவது கட்டாயமாகும். இருந்தபோதும், மாநில அரசு விருப்பப்படும் பட்சத்தில் யுஜிசி 2010 வழிகாட்டுதலில் நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச தகுதியில் எந்தவித மாற்றமும் செய்யாமல், அதை உயர்த்திக் கொள்ளலாம்.
மேலும், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் ஆசிரியராக நியமிக்கப்படுபவர் முதுநிலை பட்டப் படிப்பில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என யுஜிசி தெரிவித்துள்ளது. ஆனால், இளநிலை பட்டப் படிப்பு குறித்து எந்த தகவலும் இல்லை.
அவ்வாறு, பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர் இளநிலை பட்டப் படிப்பில் எத்தனை சதவீதத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளை ஒரே துறையில் முடித்திருக்க வேண்டுமா? அல்லது தொடர்புடைய வேறு பாடங்களிலும் மேற்கொண்டிருக்கலாமா? போன்றவற்றை சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகமோ அல்லது மாநில தேர்வு வாரியமோ முடிவு செய்து கொள்ளலாம் என யுஜிசி விளக்கம் அளித்துள்ளது.
No comments:
Post a Comment