பி.எட். மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.
இதில் தகுதியுள்ள மாணவர்களுக்கு செப்டம்பர் 16, 18 தேதிகளில் அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட உள்ளன. மேலும் குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலமும் தகவல் அளிக்கப்படும். தமிழகம் முழுவதும் உள்ள 21 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 2 ஆயிரத்துக்கும் அதிகமான பி.எட். இடங்களில் 2015-16 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் நடத்துகிறது. வருகிற 28-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 5-ஆம் தேதி வரை 6 நாள்கள் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் செப்டம்பர் 3-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை விநியோகிக்கப்பட்டன. மொத்தம் 8 ஆயிரம் விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இதில் தகுதியுள்ள மாணவர்கள் கண்டறியப்பட்டு தபால் மூலம் அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட உள்ளன. இதுகுறித்து பி.எட். மாணவர் சேர்க்கை செயலர் ஆர். பாரதி கூறியது:
பி.எட். சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் முடிந்துவிட்ட நிலையில், தபால் மூலம் வந்து சேர்ந்துள்ள விண்ணப்பங்களை சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமார் 7 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்துள்ளன.
இந்த விண்ணப்பங்களைப் பரிசீலித்து தகுதியுள்ளவர்களைத் தெரிவு செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் அடுத்த 4 நாள்களில் முடிக்கப்பட்டு விடும்.
அதைத் தொடர்ந்து தகுதியுள்ள மாணவர்களுக்கு தபால் மூலம் செப்டம்பர் 16, 18 தேதிகளில் அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்படும். மேலும், இந்த முறை விண்ணப்பதாரர்களுக்கு முதல் முறையாக குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலம் அறிவுறுத்தல் வழங்கப்பட உள்ளது. அதோடு கல்லூரி இணையதளத்திலும் கலந்தாய்வு தேதி, கட்-ஆஃப் விவரங்கள் வெளியிடப்படும். எனவே, அழைப்புக் கடிதம் கிடைக்கப் பெறாத தகுதியுள்ள மாணவர்கள், இணையதள விவரங்களின் அடிப்படையில் பி.எட். கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம் என்றார் அவர்.
No comments:
Post a Comment