Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Sunday, 12 January 2014

மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை ஆன்-லைனில் சரிபார்க்கும் வசதி

10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை (Genuinity) ஆன்-லைனிலேயே உடனுக்குடன் சரிபார்க்கும் வசதியை விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது தமிழகஅரசு தேர்வுத் துறை.

படித்த இளைஞர்கள் அரசுப் பணிகளில் சேரும் போதும் அல்லது மேல் படிப்பிற்காக கல்லூரிகளில் சேரும்போது அவர்களின் அடிப்படை கல்வித் தகுதியான 10 மற்றும் 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களின் உண்மைத் தன்மை பரிசோதிக்கப்படும். சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் அல்லது துறைகள் மூலமாக பள்ளிக் கல்வித் துறைக்கு அனுப்பி வைக்கப்படும். அவை அரசுத் தேர்வுத் துறைக்கு அனுப்பப்பட்டு சரிபார்க்கப்பட்டு சம்பந்தப்பட்ட கல்வி நிலையங்கள் அல்லது சம்பந்தப்பட்ட துறைகளுக்கு உரிய தகவல் தெரிவிக்கப்படும்.

கம்ப்யூட்டர் வாயிலாக இல்லாமல் ஆட்கள் மூலமாகவே இதுவரை சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. இதனால், தேவையற்ற கால விரயம் ஏற்படுவதுடன் பணிச் சுமையும் கூடுகிறது. இதனால், சான்றிதழ் சரிபார்க்கக் கேட்டு அனுப்பப்படும் கடிதங்கள் மாதக்கணக்கில் கூட தேங்கி விடுகிறது. இத்தகைய தேக்க நிலையை மாற்றுவதற்காக, ஆன்-லைன் மூலமாக சம்பந்தப்பட்டவர்களே சான்றிதழ்களை உடனுக்குடன் சரிபார்த்துக் கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்துகிறது அரசுத் தேர்வுத் துறை இயக்குநரகம்.
இதுகுறித்து அரசுத் தேர்வுத் துறையினர் தெரிவித்துள்ளது: 1980-ம் ஆண்டிலிருந்து இன்று வரை வழங்கப்பட்ட 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் நகல்கள் அனைத்தையும் ஆன்-லைனில் பதிவேற்றம் செய்யும் பணிகள் இப்போது முழுவீச்சில் நடைபெற்று கொண்டிருக்கின்றன. அரசுத் தேர்வுத் துறை வளாகத்தில் இருபதுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் இதற்கான பணிகளை செய்து வருகிறார்கள்.

இதுவரை சுமார் 5 கோடி சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டன. எஞ்சியவையும் பதிவேற்றம் செய்யப்பட்ட பிறகு விரைவில் இந்தத் திட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைப்பார். அனைத்து சான்றிதழ்களும் பதிவேற்றம் செய்யப்பட்ட பிறகு, அதை திறந்து பார்ப்பதற்கான பாஸ்வேர்டை அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கும் அரசுத் துறைகளுக்கும் தேர்வுத்துறையே அனுப்பி விடும். அவர்கள், வேறு யாருடைய மதிப்பெண் சான்றிதழையாவது சரிபார்க்க நினைத்தால் பாஸ்வேர்டை பயன் படுத்தி உடனுக்குடன் சான்றிதழின் உண்மைத் தன்மையை சோதித்து விடலாம் என தேர்வுத்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments: