Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Friday 10 January 2014

மே 31க்கு பிறகு அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் செயல்பட தடை

தமிழகத்தில், மே 31-ம் தேதிக்கு பிறகு அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் செயல்பட மாவட்டக் கல்வி அலுவலர்கள் அனுமதிக்கக் கூடாது என, தொடக்கக் கல்வி இயக்குநர் மகேஸ்வரன் தெரிவித்தார்.
மதுரையில் நடைபெற்ற மண்டல அளவிலான கல்வித் துறை அதிகாரிகள், அரசு பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டத்தில் அவர் பேசியது:
தமிழ்நாடு பாட நூல் நிறுவனம் மூலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களிடம் மாணவர்களுக்குத் தேவையான பாடப்புத்தகங்கள், நோட்டுகள் விவரங்களை பட்டியல் தயாரித்து, அனுப்பி வைத்துள்ளனர்.
இவற்றை அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முழுமையாக விநியோகம் செய்ய வேண்டும். இதில் குறைபாடு இருந்தாலோ, பற்றாக்குறை ஏற்பட்டோலோ முதன்மைக் கல்வி அலுவலரும், மாவட்ட கல்வி அலுவலரும்தான் பொறுப்பு.
அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். குடும்பத் தலைவரை இழந்த மாணவருக்கு அரசு கொடுக்கும் ரூ.50 ஆயிரம் நிதியுதவி திட்டத்தைச் செயல்படுத்துவதில் கல்வி அதிகாரிகள் தனிக் கவனம் செலுத்த வேண்டும்.
அரசுப் பள்ளிகளில் சமீபத்தில் 55 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட்டன. விரைவில் நெட் தேர்வு முடிவு அறிவிக்கப்படவுள்ளது.
இதில் தேர்வாகும் ஆசிரியர்களும் விரைவில் நியமிக்கப்படுவர். மேலும், மாவட்டங்கள் தோறும் காலியாகவுள்ள தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் போன்ற காலி பணியிடங்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணியிடங்களில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்.விரைவில், எந்தப் பள்ளியிலும் ஆசிரியர் இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்.
அதுவரை, பக்கத்துப் பள்ளிகளில் கூடுதலாக இருக்கும் ஆசிரியர்களை, தேவைப்படுóம் பள்ளிகளுக்கு ஒரு ஆசிரியரை மாற்றுப் பணியாக ஒதுக்க வேண்டும்.
இதுதொடர்பான அறிக்கையை முதன்மைக் கல்வி அலுவலர்கள, இயக்குநர் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். மாவட்டந்தோறும் அங்கீகாரம் இல்லாத தனியார் பள்ளிகள் இயங்குவதாக புகார்கள் வந்துள்ளன. இந்தப் பள்ளிகளுக்கு சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் எச்சரிக்கை அறிக்கை கொடுக்க வேண்டும். தகுதியிருந்தால் உடனடியாக அந்த பள்ளிகளுக்கு விண்ணப்பித்து அங்கீகாரம் பெற அறிவுறுத்த வேண்டும். இல்லையேல், அங்கீகாரம் இல்லாமல் பள்ளிகள் செயல்பட அனுமதிக்கக் கூடாது.
மே 31-ம் தேதிக்குப் பின்னர் எந்த மாவட்டத்திலும் அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் இருக்கக் கூடாது. பள்ளிகள் தொடர்பான வழக்குகளை நிலுவை வைக்கக் கூடாது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வரும் மனுக்கள் மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments: