Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, 5 December 2013

TRB:TET 2013 - ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எதிரான மனுக்கள் ஏற்கப்பட மாட்டாது

ஆசிரியர் தேர்வு வாரியம் 2013 இல் நடத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு எதிரான மனுக்கள் இனி ஏற்கப்பட மாட்டாது என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. டிஇடி தேர்வின் கீஆன்சருக்கு எதிராக சி.ராஜேஸ்வரி உள்ளிட்ட 10 பேர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து, அந்த மனுக்களை தள்ளுபடி செய்தார்.
 தீர்ப்பு விவரம்:
           ஆசிரியர் தேர்வு வாரியம் 2013 ஆக.18 இல் ஆசிரியர் தகுதித் தேர்வை (டிஇடி) நடத்தியது. தேர்வுக்குப் பிறகு, தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான உத்தேச கீஆன்சரை இணையதளத்தில் வெளியிட்டு, ஆட்சேபனை பெறப்பட்டது. ஏராளமான ஆட்சேபனைகள் பெறப்பட்டதையடுத்து, பிரச்னைக்குரிய வினாக்களுக்கு சரியான விடையை இறுதி செய்வதற்கு நிபுணர் குழுவை அமைத்தது. அக் குழுவின் பரிந்துரைகளின்படி, கீஆன்சர் நவ.5 இல் வெளியிடப்பட்டது.

           இதைத் தொடர்ந்து கீஆன்சரில் தவறான விடைகள் இடம்பெற்றிருப்பதாகக் கூறி எதிராக ஏராளமான மனுக்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் முகாந்திரம் கருதி பாடப் புத்தகங்கள் ஆய்வு செய்யப்படு, சம்பந்தப்பட்ட பாடங்களின் நிபுணர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு, நீதிமன்றத்தில் நீண்ட வாதம் மேற்கொள்ளப்பட்டது. ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதன் காரணமாக, ஆசிரியர் நியமனம் உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தேர்வு வாரியத்தால் தொடர முடியவில்லை. இந் நடவடிக்கை தடைபட்ட காரணத்தால், அரசுப் பள்ளிகள் போதிய ஆசிரியர்கள் இல்லாமல் செயல்படும் நிலைக்குத் தள்ளப்பட்டன. சில மாணவர்கள் தங்களுக்கு கணினி ஆசிரியரை நியமிக்க கல்வித் துறைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. ஆசிரியர்களை நியமிப்பது அரசுக்கு பெரும் போராட்டமாக அமைந்துள்ளது.

                இதன் முக்கியத்துவம் கருதி, இந்த வழக்கின் விசாரணைக்காக நீண்ட நேரத்தை இந் நீதிமன்றம் ஒதுக்கியது. சில கேள்விகளுக்கு கீஆன்சரில் உள்ள விடைகளை இந் நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. இதன் அடிப்படையில், தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்ய ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது. இப் பணியை முடித்து, ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான நடைமுறைகளைத் துவங்க இன்னும் ஒரு மாதம் ஆகும். இச் சூழலில், கீஆன்சருக்கு எதிராக ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்படுவது இந்த நடைமுறையை மேலும் தாமதப்படுத்தும். ஆகவே, இத்தகைய மனுக்களை ஏற்பதில்லை என நீதிமன்றம் முடிவு செய்கிறது.

               தேர்வு முடிவு வெளியிட்ட பிறகு கீஆன்சரை எதிர்த்து மனு தாக்கல் செய்ய போதிய கால அவகாசம் வழங்கப்படுகிறது. கீஆன்சரை எதிர்த்து ஏராளமான மனுக்களை விசாரணைக்கு ஏற்கும்போது, நியமன நடைமுறை பல மாதங்களுக்கு முடிவு இல்லாமல் சென்று கொண்டிருக்கும் நிலை ஏற்படும்.  இத் தேர்வு தொடர்பாக ஏற்கெனவே தாக்கல் செய்த மனுக்களின் மீதான விசாரணையில், மறுமதிப்பீடு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. அது மனுதாரர்களுக்கும் பொருந்தும் எனக் கூறி இந்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

No comments: