மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும் என்று இஸ்ரோ(திருவனந்தபுரம்) விஞ்ஞானி காளிமுத்து பேசினார்.
21 ஆவது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநில(தமிழகம்) மாநாடு திருப்பூர் அருகே சசூரி பொறியியல் கல்லூரியில் சனிக்கிழமை தொடங்கி திங்கள்கிழமை(டிச.9) வரை நடைபெறுகிறது.
இதில், அனைத்து மாவட்டங்களில் இருந்து 209 பள்ளிகள் சார்பில்
210 ஆய்வுக் கட்டுரைகளுடன் 1,000 மாணவ-மாணவிகள், 210 வழி காட்டி ஆசிரியர்கள், தமிழ் நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் என 1,400 பேர் பங்கேற்றுள்ளனர்.
இம்மாநாட்டின் துவக்க விழா சனிக்கிழமை மாலை 5 மணியளவில் நடைபெற்றது.
இதற்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாநிலத் தலைவர் பேராசிரியர் என்.மணி தலைமை வகித்தார். திருப்பூர் மாவட்ட செயலாளர் வி.ராமமூர்த்தி வரவேற்றார்.
சசூரி பொறியியல் கல்லூரி தலைவர் கந்தசாமி, திருப்பூர் மாவட்ட அறிவியல் இயக்கத் தலைவர் ஆ.ஈசுவரன் முன்னிலை வகித்தனர்.
இம்மாநாட்டை துவக்கி வைத்து இஸ்ரோ(திருவனந்தபுரம்) முதுநிலை விஞ்ஞானி காளிமுத்து பேசியது: 1993 ஆம் ஆண்டில் இருந்து நடைபெற்று வரும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு, மாணவர்களின் சிந்தனையை வளர்த்து, அறிவியல் ஆர்வத்தை தூண்டுகின்ற நல்ல வாய்ப்பை இந்த மாநாடு வழங்கி வருகிறது.
ஏன், எதற்கு என்று கேட்கும் கேள்வியில் அறிவியல் இருக்கிறது.
பள்ளிகளில் ஆசிரியர்களின் அறிவியல் ஊக்குவிப்பு அதிகமாக இருந்தால் நிச்சயமாக அனைத்துக் குழந்தைகளும் அறிவியலை விரும்புவார்கள். ஆசிரியர்கள், மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்த இது போன்ற தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கெடுப்பதை ஊக்குவிக்கவேண்டும்.
இந்த முறை 210 ஆய்வுக் கட்டுரைகள் இந்த மாநாட்டில் இடம்பெற்றிருப்பது மாணவர்களிடம் அறிவியல் ஆர்வம் அதிகரிப்பதைக் காணமுடிகிறது என்றார்.
இம்மாநாட்டின் மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் மோகனா பேசியது:
கடந்த ஆண்டு முதல், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் தேசியளவில் பங்கு பெறும் ஆய்வுக் கட்டுரைகளில் சிறந்த 20 ஆய்வுக் கட்டுரைகளை தயார்செய்த மாணவர்களுக்கு 15 நாள்கள் கரக்பூர் ஐ.ஐ.டி.யில் பயிற்சி கொடுத்து, அவர்களின் அறிவியல் உயர்கல்வியை அரசே ஏற்றுக்கொள்கிறது.
கடந்த ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட 20 ஆய்வுக்கட்டுரைகளில் 3 ஆய்வுகள் தமிழக மாணவர்கள் மேற்கொண்டதாகும். இந்த 3 ஆய்வுக் கட்டுரைகளை தயாரித்த 15 மாணவர்களுக்கு வரும் 9 முதல் 24-ம் தேதி வரை ஐ.ஐ.டி.யில்
பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்றார்.
அறிவியல் இயக்கத்தின் பொதுச்செயலாளர் ஸ்டீபன், சசூரிபொறியியல் கல்லூரி முதல்வர் ஜே.குமார், பொதுக்கல்விக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பிரின்ஷ் கஜேந்திரபாபு உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். சசூரி கலை அறிவியல் கல்லூரி முதல்வர் சுப்பிரமணியம் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment