எம்.பி.பி.எஸ். வாய்ப்பு கிடைக்காதவர்களின் அடுத்த தேர்வாக இருப்பது பி.டி.எஸ். (பல் மருத்துவம்). தமிழகத்தில் அரசு பல் மருத்துவக் கல்லூரி சென்னையில் மட்டுமே இருக்கிறது. அங்கும் 85 இடங்கள் மட்டுமே இருக்கின்றன. அதனால், இதற்கு கடும் போட்டி நிலவுகிறது. அரசு பல் மருத்துவக் கல்லூரியில் சேர ஓ.சி. பிரிவினருக்கு 196.25, பி.சி.க்கு 195, பி.சி. இஸ்லாமியருக்கு 194.75, எம்.பி.சி.க்கு 193.25, எஸ்.சி.க்கு 188 என நடப்பாண்டில் கட்-ஆஃப் மதிப்பெண்கள் வந்தன.
தமிழகத்தில் 17 தனியார் பல் மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் அரசு ஒதுக்கீடு இடங்கள் 937. இக்கல்லூரிகளில் சேர ஓ.சி. பிரிவினருக்கு 193.75, பி.சி.க்கு 189.75, எம்.பி.சி.க்கு 188, எஸ்.சி.க்கு 181.5 என நடப்பாண்டில் கட்-ஆஃப் மதிப்பெண்கள் வந்தன. இக்கடும் போட்டியை சமாளிக்க சிறந்த மதிப்பெண்கள் பெற வேண்டியது அவசியம். பி.டி.எஸ். படிப்பது மட்டுமே சிறந்த எதிர்காலத்தை அளிக்காது. அதன் மேற்படிப்புகளான ஓரல் மேஷன் அண்டு ரேடியாலஜி, ஓரல் சர்ஜரி, என்டோடான்டிக்கல்ஸ் போன்றவற்றைப் படிப்பதன் மூலம் ஏராளமான வேலைவாய்ப்புகளைப் பெறலாம்.
பி.டி.எஸ். படிப்புக்கு இணையாக கால்நடை மருத்துவ பட்டப் படிப்புக்கும் சிறந்த எதிர்காலம் உள்ளது. தமிழகத்தில் சென்னை, நாமக்கல், நெல்லை, தஞ்சை ஆகிய இடங்களில் உள்ள அரசு கால்நடை மருத்துவக் கல்லூரிகளில் 280 இடங்கள் உள்ளன. தனியார் கல்லூரிகள் கிடையாது. இங்கு சேர ஓ.சி.க்கு 196.2, பி.சி.க்கு 195.75, எம்.பி.சி.க்கு 194.50, எஸ்.சி.க்கு 181.25 என நடப்பாண்டில் கட்-ஆஃப் மதிப்பெண்கள் வந்தன.
கால்நடை படிப்பைப் பொறுத்தவரை எப்போதுமே வேலைவாய்ப்பு குவிந்து கிடக்கிறது. ஆட்கள்தான் கிடைப்பதில்லை. இந்தியா முழுவதும் ஆண்டுக்கு 40 ஆயிரம் கால்நடை மருத்துவப் பணியிடங்களுக்கு ஆட்கள் தேவை. ஆனால், படிப்பை முடிப்பவர்கள் 25,000 பேர் மட்டுமே. இவர்கள் பெரும்பாலும் கிராமச் சூழலில்தான் பணியாற்ற வேண்டியிருக்கும். தனியார் கால்நடைப் பண்ணை மற்றும் நிறுவனங்களிலும் வேலைவாய்ப்பு உண்டு. சுய வேலைவாய்ப்பாக வளர்ப்புப் பிராணிகளுக்கான மருத்துவமனையும் நடத்தலாம்.
இந்தப் படிப்பில் பெண்கள் ஏனோ ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால், பெண்களும் இதில் சாதிக்கலாம். சமீபத்தில் சென்னை கால்நடை மருத்துவ கல்லூரியில் படித்த பெண், அமெரிக்காவில் பல்வேறு விருதுகளைப் பெற்றுத் திரும்பியுள்ளார். கால்நடை மருத்துவப் படிப்பில் இன்னும் நிறைய பிரிவுகள் இருக்கின்றன. அவை நாளை.
No comments:
Post a Comment