தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப்- 2 முதல் நிலைத் தேர்வில் 4.48 லட்சம் பேர் பங்கேற்றார். இந்தத் தேர்வின் முடிவுகள் 2 மாதங்களில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழகத்தில் குரூப்- 2 தொகுதியில் வணிக வரித் துறை இணை அதிகாரி (8 காலியிடங்கள்), சார் பதிவாளர் (23 காலியிடங்கள்), தொழிலாளர் நலத் துறையின் உதவி ஆய்வாளர், உதவிப் பிரிவு அலுவலர் என மொத்தம் 1,241 காலியிடங்கள் உள்ளன.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) இந்தப் பணியிடங்களுக்கான தேர்வை மூன்று நிலைகளில் நடத்துகிறது. முதல் நிலைத் தேர்வு, பிரதான தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் முடிவில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இதில், முதல் நிலைத் தேர்வுக்கு 6,20,020 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்காக 114 இடங்களில் 2,094 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
விண்ணப்பித்திருந்தவர்களில் 77 சதவீதம் பேர் (4,48,782 பேர்) தேர்வு எழுதியதாக, அரசுப் பணியாளர் தேர்வாணைய வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தத் தேர்வுப் பணிகளைக் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டிருந்தன. மாநிலம் முழுவதும் தேர்வுக் கண்காணிப்புப் பணிகளில் 50,000 பேர் ஈடுபட்டனர்.
இந்தத் தேர்வுப் பணிகளை, சென்னை சாந்தோமில் உள்ள ரோசரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் சி.பாலசுப்பிரமணியன், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஷோபனா ஆகியோர் நேரில் பார்வையிட்டனர். அதன்பிறகு நிருபர்களிடம் பாலசுப்பிரமணியன் கூறியது:
குரூப்- 2 முதல் நிலைத் தேர்வு முடிவுகள் 2 மாதங்களில் வெளியிடப்படும். அதன்பிறகு, பிரதானத் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படும். குரூப்- 1 தேர்வுக்கு இதுவரை 60,944 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 9 ஆகும்.
சுகாதாரத் துறையின் கீழ் உள்ள மகப்பேறு குழந்தைகள் நல அலுவலர் காலிப் பணியிடங்களுக்கு முதல்முறையாகத் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் 81 காலிப் பணியிடங்கள் உள்ளன என்றார்.
குடியரசுத் தலைவர் குறித்த கேள்விக்கு தவறான பதில்கள்
குலசேகரம், ஜூலை 26: தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்- 2 தேர்வில், இந்தியாவின் 13-ஆவது குடியரசுத் தலைவர் யார் என்ற கேள்விக்கு தவறான பதில்கள் இடம் பெற்றுள்ளதாக தேர்வர்கள் புகார் கூறியுள்ளனர்.
குரூப்- 2 தேர்வில், இந்தியாவின் 13-ஆவது குடியரசுத் தலைவர் என்ற கேள்வி இடம் பெற்றுள்ளது. இதற்கு பதில்களாக அப்துல் கலாம், பிரதீபா பாட்டீல், கே.ஆர்.நாராயணன், பி.டி.ஜாட்டி ஆகிய பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் 13-ஆவது குடியரசுத் தலைவராக தற்போதைய குடியரசுத் தலைவரான பிரணாப் முகர்ஜி இருக்கும் நிலையில், அவரது பெயர் பதில் பட்டியலில் இடம்பெறவில்லை.
மேலும், பதிலில் இடம்பெற்றுள்ள பி.டி.ஜாட்டி, இடைக்கால குடியரசுத் தலைவராக இருந்தவர் என்பதால், அவரது பெயர் குடியரசுத் தலைவர்கள் வரிசையில் வராது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment