காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த 90 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் 31 ஆயிரம் மாணவர்களுக்கு ஆங்கிலம் பேசும் பயிற்சி வழங்கப்படுகிறது.
இதற்காக "கரடி பாத்' என்கிற கல்வி நிறுவனத்துடன் அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்ககம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. மகிழ்ச்சியுடன் படித்தல் என்ற இந்தத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரசுப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கான பயிற்சியை அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி சென்னையில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார். அதன்படி, இந்தப் பள்ளிகளில் 3 முதல் 5-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு அடுத்த 2 ஆண்டுகளுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்படும் என கரடி பாத் கல்வி நிறுவன இயக்குநர் சி.பி.விஸ்வநாத் கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியது:- அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு வீடுகளில் ஆங்கிலம் பேசும் வாய்ப்புகள் இருக்காது. எனவே, அவர்கள் ஆங்கிலம் பேசுவதற்கு சிரமப்படுவர். இந்தப் பயிற்சியானது மாணவர்களுக்கு ஆங்கிலம் பேசுவதற்கான சூழலை ஏற்படுத்தித் தருவதற்கு முக்கியத்துவம் வழங்கும்.
வாரத்துக்கு மூன்று நாள்கள் மாணவர்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்படும். ஒவ்வொரு வகுப்பிலும் நான்கு நிலைகளில் மாணவர்களுக்கு ஆங்கிலம் கற்றுத் தரப்படும். செயல் வழியாகவும், பாடல்களின் வழியாகவும், கதைகளின் வழியாகவும், படிப்பதன் வழியாகவும் ஆங்கிலம் கற்றுத் தரப்படும்.
மொத்தம் 2 ஆண்டுகளில் 2 நிலைகளில் இந்தத் திட்டம் கற்றுத்தரப்படும். ஒவ்வொரு நிலையிலும் 72 வகுப்புகள் இடம் பெற்றிருக்கும். இந்தத் திட்டத்தின் முடிவில், மாணவர்கள் ஆங்கிலம் பேசுவதில் மாற்றம் ஏற்படும். ஆங்கிலம் பேசுவதில் மாற்றம் ஏற்படுவது ஆய்வுகளின் மூலம் உறுதிசெய்யப்பட்டால், பிற அரசுப் பள்ளிகளுக்கும் இது விரிவுபடுத்தப்படலாம் என்றார் அவர். தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன், ரீட் அலையன்ஸ் நிறுவனத்தின் மோலி மாகியர், யுஎஸ் எய்ட் இந்தியா நிறுவனத்தின் பலாகா தே உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment