Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday 20 July 2015

பாரதியார் பல்கலை தொலைதூர ஆராய்ச்சிப் படிப்பு பி பிரிவில் ஆண்டுக்கு 3 ஆயிரம் பேர் சேர்க்கை?

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் நடத்தப்படும் தொலைதூர ஆராய்ச்சி படிப்புக்கான பி பிரிவில் ஆண்டுக்கு சுமார் 3 ஆயிரம் பேர் சேர்க்கப்படுவதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகியுள்ளது. பல்கலைக்கழகத்தின் இந்த நடவடிக்கை தகுதியற்றவர்கள் பி.எச்டி. பட்டம் பெறுவதற்கு வழிவகுத்து வருவதாக கடுமையான குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

பாரதியார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (பூடா) மூத்த பேராசிரியர், ‘தி இந்து’விடம் கூறியதாவது:
முழு நேர ஆராய்ச்சிப் படிப்பு, பகுதி நேர ஆராய்ச்சி படிப்பு வழிமுறைகள் மட்டும் 2008-ம் ஆண்டு வரை இருந்தது. பல்கலைக்கழகத்துக்கு வந்து பயில முடியாதவர்களுக்காக கொண்டு வரப்பட்டதுதான் தொலைதூர பி பிரிவு ஆராய்ச்சிப் படிப்பு முறை.
இது ஒரு வகையில் நல்ல நடைமுறைதான். பணியில் உள்ளவர்களின் ஆராய்ச்சி படிப்பின் தகுதியின் அடிப்படையில் பட்டம் பெற வழிவகுக்கிறது. இதில், நடைமுறைத் தவறு என்னவென்றால் வழிகாட்டும் பேராசிரியராக யாரை வேண்டுமானாலும் எங்கிருந்து வேண்டுமானாலும் நியமித்துக் கொள்ளலாம் என்பதுதான்.
இதனால், பலர் பணத்தை செலவு செய்து பி.எச்டி. பட்டத்தை எளிதில் பெற்று விடுகின்றனர். இந்த விதியை மாற்ற வேண்டும். இந்த பிரிவில் ஆண்டுதோறும் சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை வரைமுறைப்படுத்த வேண்டும்.
பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள் மூலமாக ஆண்டுக்கு முழு நேரம், பகுதி நேரம் அடிப்படையில் மொத்தமாக 120 மாணவர்கள்தான் சேர்க்கப்படுகிறார்கள்.
ஆனால், பி பிரிவு ஆராய்ச்சிப் படிப்பு வாயிலாக ஆண்டுக்கு 3 ஆயிரம் பேர் சேர்க்கப்படுகிறார்கள். இதனால், டாக்டோரல் கமிட்டிக் கூட்டத்தில் மட்டும் ஒரு நாளைக்கு ஒரு பேராசிரியர் குறைந்தபட்சம் 40 பேரை ஆய்வு செய்ய வேண்டி உள்ளது. இவ்வாறு 40 பேரை ஒரே நாளில் ஆய்வு செய்தால், அது எப்படி தகுதி வாய்ந்ததாக இருக்கும்.
மிகவும் முக்கியமாக, யு.ஜி.சி. விதியின்படி ஒரு பேராசிரியர் 8 பேருக்குத்தான் ஒரு சமயத்தில் ஆராய்ச்சிப் படிப்பு வழிகாட்டியாக இருக்க வேண்டும். ஆனால், பி பிரிவு ஆராய்ச்சிப் படிப்பு வழிகாட்டும் ஆசிரியர் விதிகளில் உள்ள குளறுபடி காரணமாக, ஒரு பேராசிரியர் 100-க்கும் அதிகமான மாணவர்களுக்குக் கூட வழிகாட்டியாக உள்ள உதாரணங்களும் உள்ளன.
இந்த விஷயத்தை கண்காணிக்க சரியான அமைப்பு ரீதியிலான கண்காணிப்பு இல்லை. வழிகாட்டும் ஆசிரியர் என்ற அடிப்படையில் பணத்தைப் பெற்றுக் கொண்டு பி.எச்டி. பட்டத்தை பெறுவதற்கு வணிக நோக்கில் துணைபுரிந்து வருகின்றனர் பல பேராசிரியர்கள். இந்த குறைபாடுகள் திருத்தப்பட்டு நேர்படுத்தப்பட வேண்டும் என்றார்.
இது குறித்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறும்போது, ‘முனைந்து பெறுவதுதான் முனைவர்பட்டம். அதனால்தான் குறைந்தபட்சம் 4 ஆண்டு அவசாகம் வைத்துள்ளார்கள். இதில், பகுதி நேரமாகக் கூட அனுமதிக்கலாம். ஆனால், பி பிரிவு என்ற முறையில் தொலைதூர ஆராய்ச்சிப் படிப்பு நடத்துவது கல்வியை சீரழிக்கும் செயல். அவ்வாறு பெறும் பி.எச்டி. குளோபல் மார்க்கெட்டுக்கான பட்டமாகத்தான் இருக்கும். ஆய்வு என்பது சமூகம், பொருளாதார வளர்ச்சிக்கு பயன் அளிப்பதாக இருக்க வேண்டுமே தவிர, இது போன்று இருக்கக் கூடாது’ என்றார்.

No comments: