Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Saturday 18 July 2015

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.: இரண்டாம் கட்ட கலந்தாய்வு அட்டவணை வெளியீடு

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு இரண்டாம் கட்டக் கலந்தாய்வு அட்டவணையை மருத்துவக் கல்வி தேர்வுக் குழு வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளது.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அரங்கில் வரும் ஜூலை 22-ஆம் தேதி முதல் ஜூலை 25-ஆம் தேதி வரை இரண்டாம் கட்டக் கலந்தாய்வு நடைபெற உள்ளது. சுமார் 5,000 மாணவர்களுக்கு அழைப்புகள் அனுப்பப்பட்டு வருகின்றன.
காலியிடங்கள்: அரசு மருத்துவக் கல்லூரிகளில் தற்போது 6 எம்.பி.பி.எஸ். காலியிடங்களே உள்ளன. பிடிஎஸ் படிப்பிலிருந்து விலகி எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரத் தேர்வான மேலும் 3 மாணவர்கள், ரூ.5 லட்சம் செலுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்துள்ளதையடுத்து அரசு மருத்துவக் கல்லூரிகளின் காலியிடங்களின் எண்ணிக்கை 9-லிருந்து 6-ஆகக் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
எனவே அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 6 எம்.பி.பி.எஸ். காலியிடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 108 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். காலியிடங்கள், சென்னை பாரிமுனையில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள 20 பி.டி.எஸ். காலியிடங்கள் ஆகியவை இரண்டாம் கட்டக் கலந்தாய்வில் நிரப்பப்படும். 
மேலும் சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பித்துள்ள 1,020 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களும் நிரப்பப்பட உள்ளன. 
இணையதளத்தில் காத்திருப்போர் பட்டியல்: முதல் கட்டக் கலந்தாய்வில் பங்கேற்று கல்லூரியைத் தேர்வு செய்யாமல் காத்திருப்போர் பட்டியலில் 1,000-த்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர். 
இத்தகையோர் பட்டியல், கலந்தாய்வு அட்டவணை, கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கான அறிவுரைகள் ஆகியவை சுகாதாரத் துறையின் இணையதளம் www.tnhealth.org தமிழக அரசின் இணையதளம் www.tn.gov.in-இல் வெளியிடப்பட்டுள்ளன.

No comments: