’பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.,யில் அரசியல் தலையீட்டால், கல்வித்தரம் குறைந்து விட்டது. புதிய அமைப்பு, அரசியல் தலையீடு இன்றி செயல்பட்டால் மட்டுமே, கல்வித் தரம் உயரும்’ என, கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
உயர்கல்வியின் தரத்தில் மாற்றம் கொண்டு வருவது குறித்து, ஆய்வு செய்ய, மத்திய அரசால், ஹரி கவுதம் கமிட்டி அமைக்கப்பட்டது. இக்கமிட்டி தற்போது ஆய்வு அறிக்கையை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் யு.ஜி.சி.,யை கலைத்து விட்டு, அதற்குப் பதில், தேசிய உயர்கல்வி ஆணையம் அமைக்க பரிந்துரைத்துள்ளது.
இதுகுறித்து கல்வியாளர்கள் அளித்த பேட்டி:
இ.பாலகுருசாமி, முன்னாள் துணை வேந்தர், அண்ணா பல்கலை: யு.ஜி.சி.,யில் கடும் ஆள் பற்றாக்குறை உள்ளது. கடந்த, 10 ஆண்டுகளாக அரசியல் தலையீடுகள், சரியான தலைவரை நிர்ணயிக்காதது, அரசியல் ரீதியாக அனுபவமற்றவர்களை உறுப்பினராகச் சேர்ப்பது போன்ற பல மோசமான நடவடிக்கைகளால், கல்வித்தரம் வீழ்ந்து விட்டது.
யு.ஜி.சி., அனைத்து உயர்கல்வி நிறுவனங்களையும் கட்டுப்படுத்தும், கண்காணிக்கும், வழிகாட்டும் அமைப்பாக உருவானது. ஆனால், பல கல்வி நிறுவனங்கள் அதன் கட்டுப்பாட்டில் இல்லை. கட்டுப்பாட்டிலுள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைகளிலும் துணை வேந்தர், பேராசிரியர் நிர்ணயம், மாணவர் சேர்க்கை, நிதி உதவி போன்றவற்றில் எந்தக் கண்காணிப்பும் செய்வதில்லை. பெயரளவில் கண்காணிப்பு அமைப்பாகச் செயல்படுகிறது.
மேலும் கல்வித்தரம், தரமான பேராசிரியர் நியமனம் போன்றவற்றிலும் ஒழுங்கான வழிகாட்டுதல்களோ, மேல் நடவடிக்கைகளோ இல்லை.அதனால், யு.ஜி.சி.,யின் கட்டுப்பாட்டில் இருந்தாலும் பல்கலைகள் அரசியல் செல்வாக்கு மிக்கவர்களின் கைப்பாவையாகச் செயல்படும் நிலையே தொடர்கிறது.எனவே, யு.ஜி.சி.,யை மாற்றி அமைப்பது அல்லது புதிய அமைப்பு உருவாக்குவது வரவேற்கத்தக்கது.
ஆனால், புதிய அமைப்பிலும் அரசியல் தலையீடுகள், அரசியல் சிபாரிசுடன் கூடிய பதவி நிர்ணயம் இருக்கக் கூடாது. ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., போன்ற உயர்கல்வி நிறுவனங்களையும் கட்டுப்படுத்தும் அதிகாரம் இருக்க வேண்டும்.சுயாட்சி பெற்ற தலைவரை நிர்ணயித்து, சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும்.
ஜி.திருவாசகம், முன்னாள் துணை வேந்தர், சென்னை பல்கலை: நாடு சுதந்திரம் பெற்ற காலம் முதல், யு.ஜி.சி., அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பு துவங்கப்பட்ட காலத்தை பார்க்கும் போது, தற்போது உயர்கல்வி படிக்கும் மாணவர் எண்ணிக்கை, 10 சதவீதத்திலிருந்து, 35 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆனாலும், சர்வதேச அளவிலான, 85 சதவீதத்தை நாம் அடைய வேண்டும்.
உயர்கல்வியின், மூன்று அம்சங்களான கல்வி வாய்ப்பு வழங்குதல், எல்லா தரப்பு மக்களுக்கும் சம வாய்ப்பு மற்றும் தரமான கல்வி ஆகியவற்றில், உயர்கல்வி வாய்ப்பு ஓரளவுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், பெண்கள், கணவனை இழந்த பெண்கள், மாற்றுத் திறனாளிகள், சமூகத்தில் பின்தங்கியோர் ஆகியோருக்கு உரிய வாய்ப்புகள் வழங்கப்பட்டதா என்றால், அதில் பின்தங்கிய நிலை தான் உள்ளது.
இதற்கு யு.ஜி.சி.,யால் சுயநிதிக் கல்லூரிகளை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளதே காரணம். தரமான கல்வி வழங்கப்பட்டதா என்பதிலும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.இதற்கு தரமான ஆசிரியர்கள் வேண்டும். ஆசிரியர்கள் வேண்டுமென்றால் அவர்களுக்கு, ’ஸ்லெட், நெட்’ தேர்வு முக்கியம் என்று யு.ஜி.சி., சொல்கிறது. ஆனால், பல முக்கிய பாடங்கள், ’ஸ்லெட், நெட்’ தேர்வுகள் பட்டியலில் இன்னும் சேர்க்கப்படவில்லை. அப்படியென்றால் எப்படி ஆசிரியர்கள் கிடைப்பர். எனவே, புதிய அமைப்பு வருவது வரவேற்கத்தக்கது என்றால், அந்த அமைப்பு சுயாட்சி கொண்ட, உண்மையான கல்வித் தரத்தை ஆய்வு செய்து, மாற்றங்களை கொண்டு வருவதாக இருக்க வேண்டும். அதேநேரம் யு.ஜி.சி.,யை உடனடியாக கலைக்கும் முடிவை கைவிட வேண்டும்.
எஸ்.எஸ்.ராஜகோபால், கல்வியாளர்: பா.ஜ., ஆட்சியில் முதலில் திட்டக்குழு கலைக்கப்பட்டது. தற்போது யு.ஜி.சி.,யை கலைக்கப் போகின்றனர். அதற்கு பதில் அரசின் குரலை ஒலிக்கும் ஒரு அமைப்பை ஏற்படுத்தினால், அது கல்வியில் மாற்றம் கொண்டு வராது.புதிய அமைப்பு என்பது, பெயரளவில் இல்லாமல், உண்மையில் அரசியல் தலையீடு இல்லாத சுயாட்சி அதிகாரம் கொண்டதாக இருக்க வேண்டும். யு.ஜி.சி., போன்ற அமைப்பில், அரசியல் ரீதியாக உறுப்பினர்களை நிர்ணயிக்கக் கூடாது.தற்போது யு.ஜி.சி.,யில், வெறும், 30 சதவீத கல்வி நிறுவனங்களே கட்டுப்பாட்டில் உள்ளன. மாறாக, 100 சதவீத கல்வி அமைப்புகள் கட்டுக்குள் கொண்டு வரப்பட வேண்டும். மொத்தத்தில் அரசியல் ரீதியான அமைப்பாக இருந்தால், அதனால் எந்த பலனும் இருக்காது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment