சட்டசபையில் இன்று பாலபாரதி (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு) ஒரு கவன ஈர்ப்பு கொண்டுவந்தார். அதில் 2013–ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படாதது குறித்துவிளக்கம் கேட்டு இருந்தார்.இதற்கு பதில் அளித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அது குறித்து அவர் கூறியதாவது:–
ஆசிரியர் தேர்வு வாரியம் 12.07.12 அன்று நடத்திய தகுதி தேர்வில் 7 லட்சத்து 14 ஆயிரத்து 526 பேர் தேர்வு எழுதினார்கள். அதில் 2,448 பேர் மட்டுமே தேர்வு பெற்றனர். இது 0.34 சதவீதமாகும். தேர்ச்சி விகிதம் குறைவாக இருந்ததால் 14.10.2012 அன்று துணை தகுதி தேர்வு நடத்தப்பட்டது.அதில் 6 லட்சத்து 43 ஆயிரத்து 95 பேர் தேர்வு எழுதினார்கள். அவர்களில் 19,261 பேர் தேர்வு பெற்றனர். அது 2.99 சதவீதம். தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளது.2013–ம் ஆண்டில் ஆசிரியர் தகுதி தேர்வு ஆகஸ்டு மாதம் 17, 18 ஆகிய தேதிகளில் நடந்தது. இதில் இடைநிலை ஆசிரியர் பணிக்கு தகுதி தேர்வு எழுதிய 2 லட்சத்து 62 ஆயிரத்து 187 பேரில் 12 ஆயிரத்து 596 பேர் தேர்ச்சி பெற்றனர். பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 4 லட்சத்து 311 பேர் தேர்வு எழுதியதில் 16 ஆயிரத்து 922 பேர் தேர்ச்சி பெற்றனர்.இதற்கிடையில் முதல் – அமைச்சர் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதில் உரையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற நிர்ணயிக்கப்பட்ட 60 சதவீத மதிப்பெண் என்பதை மாற்று திறனாளிகளுக்கு 5 சதவீதம் குறைந்து நிர்ணயம் செய்யப்படும் என அறிவித்தார். 06.02.2014–ல் 60 சதவீதத்தில் இருந்து 5 சதவீதம் குறைக்கப்பட்டும் ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர்மற்றும் மாற்று திறனாளிகள் ஆகியோருக்கும் தேர்ச்சி மதிப்பெண் 55 சதவீதம் அல்லது 82 மதிப்பெண் என்று நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டது.முதல் – அமைச்சரால் அறிவிக்கப்பட்ட இந்த சலுகையில் 43 ஆயிரத்து 183 பேர் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர். ஏற்கனவே, தேர்ச்சி பெற்றிருந்தவர்களுடன் இவர்களையும் சேர்த்து 72 ஆயிரத்து 701 பேரின் கல்விச் சான்றிதழ்கள் சரிபார்த்து முடிக்கப்பட்டுள்ளது.ஆனால் தகுதி தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான ஒரு சில விடைக்குறிப்புகள் சரியானது அல்ல என்று சென்னை உயர்நீதிமன்றத்திலும், மதுரை உயர்நீதிமன்ற கிளையிலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப வேண்டும் என்ற அடிப்படையில் நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளை விரைவில் முடிவுக்கு கொண்டுவர அரசால் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான தீர்ப்புகள் பெறப்பட்டவுடன் ஆசிரியர் தகுதி தேர்வு முடிவுகளை வெளியிடவும், பணி நியமனம் வழங்கவும் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.2013–ம் ஆண்டு தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு2 அல்லது 3 வாரத்தில் பணி நியமன ஆணை வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் கே.சி. வீரமணி கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment