சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள ஏழை மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக மத்திய-மாநில அரசுகள் பல விதமான கல்வி உதவித்தொகைகளை வழங்குகின்றன. அதுமட்டுமின்றி, “ஃபெலோஷிப்” என்ற பெயரில் ஏராளமான உதவித்தொகை திட்டங்களையும் செயல்படுத்துகின்றன.
சமூக ரீதியில் மிகவும் நலிந்த பிரிவினரான கருதப்படும் ஆதி திராவிடர்கள் மற்றும் பழங்குடியினருக்கு கூடுதல் கல்வி உதவித்தொகையும், பெல்லோஷிப் திட்டங்களும் வழங்கப்படுகின்றன. உதவித்தொகை வழங்கப்படுவதுடன் மட்டுமி்ன்றி மேற்படிப்புகளில் டியூஷன் கட்டணத்துக்கும் விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. இந்த தொகையை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் ஆதி திராவிடர்- பழங்குடியினர் நலத்துறையிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்
பிளஸ் 2 முடித்துவிட்டு கல்லூரிகளில் படிக்கும் ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிட மாணவ-மாணவிகளுக்கு பெற்றோரின் ஆண்டு வருமானத்தை கணக்கில்கொள்ளாமல் கல்விக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க வகை செய்கிறது சமூகநலத்துறையின் 13.10.1977 தேதியிட்ட அரசாணை (எண். 722).
பள்ளிப் படிப்பை முடிக்கும் எல்லா மாணவர் களுக்கும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் இடம் கிடைத்து விடுவதில்லை. தனியார் கல்லூரி களிலும் சேர வேண்டிய சூழல் வரும். இதை கருத்தில் கொண்டு, சுயநிதி தனியார் கல்லூரிகளில் இலவசம் மற்றும் கட்டண சீட் பிரிவின் கீழ் படிக்கும் ஆதி திராவிடர் மாணவர்களுக்கு, சுயநிதி கல்லூரிகளுக்கான கட்டண நிர்ணயக்குழு நிர்ணம் செய்த கட்டணங்களை மட்டும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் அரசே நேரடியாக வழங்கும். இதற்கு வகை செய்வது ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் 11.9.2012 தேதியிட்ட அரசாணை (எண் 92) ஆகும்.
தனியார் சுயநிதி கல்லூரிகளில் டியூஷன் கட்டணம் உள்ளிட்ட கல்விக்கட்டணங்களை அரசே செலுத்திவிடுகிறது. அதேபோல், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் படிக்கும் ஆதி திராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய ஆதி திராவிடர் மாணவர் களுக்கு டியூஷன் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
டியூஷன் கட்டண விலக்கு அளிக்கப்பட்டும் பல அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் டியூஷன் கட்டணம் செலுத்தச்சொல்லி மாணவர்கள் நிரப்பந்தப்படுத்தப்படுவதாக அரசுக்குப் புகார் மேல் புகார்கள் வந்தன.
இதற்கு முடிவு கட்டும் வகையில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் செயலர் கண்ணகி பாக்கியநாதன், மேற்கண்ட அரசாணைகளை சுட்டிக்காட்டி, கல்லூரி கல்வி இயக்குநர், தொழில்நுட்பக் கல்வி ஆணையர், மருத்துவக் கல்வி இயக்குநர் ஆகியோருக்கு கடந்த 9.2.2015 அன்று ஒரு சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார்.
எனவே, இனிமேல் எந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனமும் டியூஷன் கட்டணம் செலுத்தச்சொல்லி ஆதி திராவிடர், பழங்குடியின மாணவர்களையும், மதம் மாறிய ஆதி திராவிட மாணவர்களையும் கட்டாயப்படுத்தாது என நம்பலாம்
No comments:
Post a Comment