Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, 29 July 2014

கண்டுகொள்ளாத மாணவர்கள் - மூடுவிழா காணும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள்

தமிழகத்தில், ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளுக்கு, திடீர் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. ஆசிரியர் பயிற்சிப் படிப்பில், மாணவர்கள் சேராததால், நடப்பாண்டில் மட்டும், 100 தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் மூடு விழா கண்டுள்ளதாக, கல்வித் துறை வட்டாரம் தெரிவித்தது.

தமிழகத்தில், 38 அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள்; 42, அரசு உதவிபெறும் பள்ளிகள்; 450 தனியார் பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில், இரண்டு ஆண்டு, ஆசிரியர் பட்டயப் பயிற்சி படிப்பு வழங்கப்படுகிறது. இந்த பயிற்சியை முடித்து, டி.இ.டி., (ஆசிரியர் தகுதித்தேர்வு) தேர்வில், அதிக மதிப்பெண் பெற்று, தேர்வு பெற்றால், அரசு ஆரம்பப் பள்ளிகளில், இடைநிலை ஆசிரியராக பணியாற்ற முடியும்.
வரவேற்பு இல்லை
இடைநிலை ஆசிரியர் நியமனம் அதிகளவில் நடக்காதது மற்றும் பல்வேறு போட்டி தேர்வுகளை சந்திக்க வேண்டிய நிலை ஆகியவற்றின் காரணமாக, இந்த படிப்பிற்கு, மாணவர்கள் மத்தியில், முற்றிலும் வரவேற்பு இல்லை. இதன் காரணமாக, இந்த ஆண்டுக்கு நடந்த, ஆசிரியர் பயிற்சிப் படிப்பு சேர்க்கையில், அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில், 2,240 மாணவர்கள் மட்டுமே சேர்ந்தனர். தனியார் பள்ளிகளில், அரசு ஒதுக்கீட்டு இடங்களில், வெறும், 50 மாணவர்கள் சேர்ந்தனர்.
மொத்தத்தில், அரசு மற்றும் தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளில், அரசு ஒதுக்கீட்டின் கீழ், 13 ஆயிரம் இடங்கள் இருந்த போதும், 2,300 இடங்கள் மட்டுமே நிரம்பின. தனியார் பள்ளிகளில், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் காத்தாடுகின்றன. இதன் காரணமாக, தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளுக்கு, சிக்கல் ஏற்பட்டு உள்ளது. மாணவர்கள் சேராததால், நடப்பாண்டில் மட்டும், இதுவரை, 100 தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, கல்வித் துறை வட்டாரம், நேற்று கூறியதாவது: மூடப்பட்டுள்ள தனியார் பள்ளிகள் குறித்த விவரம், ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து சேகரிக்கப்படும்.  அப்போது, எத்தனை பள்ளிகள் மூடுவதற்கு அனுமதி கேட்டு, பெங்களூரில் உள்ள, ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சிலில், மனு கொடுத்துள்ளன என்ற விவரம் தெரியும்.
நூறு பள்ளிகளுக்கு குறையாமல், மூடுவதற்கு விருப்பம் தெரிவித்து, கடிதம் கொடுத்திருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. நடப்பாண்டில், தனியார் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளின் எண்ணிக்கை 350 ஆக குறையும். இவ்வாறு, துறை வட்டாரம் தெரிவித்தது.
ஒரு மாதம் இணைப்பு பயிற்சி
அரசு ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு, கடந்த 23ம் தேதி வகுப்பு துவங்கியது. இவர்களுக்கு, ஆங்கிலம், தமிழ், கணிதம் ஆகிய பாடங்களில், ஒரு மாதம் இணைப்பு பயிற்சி (பிரிட்ஜ் கோர்ஸ்) அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஆசிரியர் பணி, ஆசிரியர் கல்வி பாடத் திட்டம் ஆகியவை குறித்தும், மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
பல்கலை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் மற்றும் அரசு ஆசிரியர் கல்வி நிறுவன விரிவுரையாளர்கள் ஆகியோரை கொண்ட குழு, மாணவர்களுக்கு, பயிற்சி அளித்து வருகின்றன. ஒரு மாதத்திற்குப் பிறகே பாடம் சார்ந்த வகுப்புகள் துவங்கும் என, துறை வட்டாரம் தெரிவித்தது.

No comments: