Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday, 29 July 2014

மகளிர் திட்ட அதிகாரி பணியிடங்கள் 21 மாவட்டங்களில் காலி: மேம்பாட்டுப் பணிகள் பாதிப்பு

சென்னை திருச்சி, கோவை உள்பட 21 மாவட்டங்களில், மகளிர் திட்ட அதிகாரி பணியிடங்கள் பல மாதங்களாக காலியாக உள்ளன. இதனால், கிராமப்புறங்களில் மகளிர் மேம்பாட்டுப் பணிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன.
கிராமங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கி, அவர்கள் தொழில் தொடங்க உதவி செய்வது, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களை ஏற்படுத்தி கிராமப்புற பெண்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவது, மாநில கிராமப்புற வாழ்வாதார திட்டப் பணிகளை செயல்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிர் திட்ட அதிகாரிகள் (இணை இயக்குநர் அந்தஸ்து) பணியாற்றுகின்றனர்.

நீண்ட நாட்களாக..
ஆனால், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், தருமபுரி, சேலம், நீலகிரி, கோவை, திருப்பூர், கரூர், திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப் பட்டினம், திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 21 மாவட்டங்களில் மகளிர் திட்ட அதிகாரி பணியிடங்கள் மாதக் கணக்கில் காலியாக உள்ளன. இதில் ஒருசில மாவட்டங்களில் ஓராண்டு காலமாக இந்த நிலை நீடிக்கிறது.
சில மாவட்டங்களில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (டிஆர்டிஏ) திட்ட அதிகாரிகளும் (பிஓ) சில மாவட்டங்களில் உதவி திட்ட அதிகாரிகளும்(ஏபிஓ) மகளிர் மேம்பாட்டு திட்ட அதிகாரி பொறுப்பை கவனித்து வருகின்றனர்.
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டம், “தாய்” திட்டம், இந்திரா காந்தி நினைவு குடியிருப்பு திட்டம் உள்ளிட்ட திட்டப் பணிகளை கையாளும் டிஆர்டிஏ திட்ட அதிகாரிகளுக்கு இதனால் பணிச்சுமை அதிகமாகிறது. இதனால் கூடுதலாக மகளிர் திட்ட பணிகளில் சரிவர கவனம் செலுத்த முடியவில்லை.
பணிகள் பாதிப்பு
மகளிர் திட்ட அதிகாரி பொறுப்பை கூடுதலாக கவனித்து வரும் உதவி திட்ட அதிகாரி களுக்கும் இதேநிலைதான். இதனால், மேற்கண்ட 21 மாவட்டங் களிலும் கிராமப்புறங்களில் மகளிர் மேம்பாட்டுப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு சுழல் நிதி கிடைப்பதிலும், அவர்கள் தொழில் தொடங்குவதிலும், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களை உருவாக்குவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மேலும், மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்ட சமூக தணிக்கைப் பிரிவில் 2 இணை இயக்குநர் பதவிகள், ஊரக வளர்ச்சித் துறை இயக்குநரகம், சென்னை அருகே மறைமலை நகரில் இயங்கி வரும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் மாநில ஊரக வளர்ச்சி நிறுவனம் (எஸ்.ஐ.ஆர்.டி), மதுரை அருகே டி.கல்லுப்பட்டியில் உள்ள மண்டல ஊரக வளர்ச்சி வளர்ச்சி நிறுவனம், தாட்கோ நிறுவனம் (அயற்பணி) ஆகியவற்றில் தலா ஓர் இணை இயக்குநர் பதவி என 7 இணை இயக்குநர் பதவிகளும் பல மாதங்களாக காலியாக உள்ளன.
உதவி இயக்குநர் பணியிடம்
தவிர உதவி இயக்குநர் பணி களில், 50 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. ஒரு சில இடங்கள் ஓராண்டுக்கு மேலாக காலியாக உள்ளன.
இந்நிலையில், உதவி இயக்கு நர்களுக்கு பதவி உயர்வு அளிக்கும் வண்ணம் 49 பேர் அடங்கிய பதவி உயர்வு முன்னுரிமை பட்டியல் அரசுக்கு அனுப்பப்பட்டு 10 மாதங்கள் ஆகியும் இன்னும் எந்த உத்தரவும் பிறப்பிக்கப் படவில்லை.
இந்தக் கோப்புகள் தலைமைச் செயலகத்தில் மாதக் கணக்கில் முடிவெடுக்காமல் உள்ளதாக கூறுகின்றனர்.
இதற்கிடையே, டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு மூலம் நேரடியாக ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட 9 பேர், ஓராண்டு கால பயிற்சியை முடித்து விட்டனர். ஒரு மாதமாகியும் இன்னும் அவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படவில்லை. அவர்கள் அனைவரும் கட்டாய காத்திருப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

No comments: