Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday 8 July 2014

அண்ணாமலைப் பல்கலைக்கழக எம்.பி.பி.எஸ். படிப்பு: அரசுக் கட்டணத்தை நிர்ணயிக்கக் கோரி வழக்கு

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புக்கு அரசு மருத்துவக் கல்லூரி கட்டணத்தை நிர்ணயிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவுக்கு ஒரு வாரத்துக்குள் பதில் அளிக்குமாறு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வேலூர் மாவட்டம் பாச்சல் கிராமத்தைச் சேர்ந்த கே.ரமேஷ்குமார் ராஜா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்:
எனது மகளின் பெயர் ஆர்.பிரியதர்ஷினி. 2013-14 ஆம் கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்து 1161 மதிப்பெண் பெற்றார். எம்.பி.பி.எஸ்.க்கான கட் ஆஃப் மதிப்பெண் 196.75 பெற்றார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ்ஸில் சேருவதற்கு தகுதியின் அடிப்படையில் எனது மகளுக்கு இடம் கிடைத்தது. 
 கடந்த மாதம் 25-ஆம் தேதி எம்.பி.பி.எஸ். கட்டணமாக ரூ. 5.54 லட்சமும், விடுதிக் கட்டணமாக ரூ 85 ஆயிரமும் மொத்தம் ரூ. 6.39 லட்சம் செலுத்துமாறு பல்கலைக்கழகம் எனக்கு கடிதம் அனுப்பியது. மேலும், ஜூலை 2-ஆம் தேதிக்குள் கட்டணம் செலுத்தவில்லையென்றால் தானாக சேர்க்கை ரத்தாகி விடும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டது.
 எனது மகளின் படிப்புக்காக அந்தக் கட்டணத்தை செலுத்திவிட்டேன். எங்கள் கிராமம் மற்றும் எனது குடும்பத்தில் எனது மகள்தான் முதல் பட்டதாரி ஆகப்போகிறாள். அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுக்கு ரூ. 12,290 மட்டும் தான் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எம்.பி.பி.எஸ்.க்கு ரூ. 5.54 லட்சமும், பி.டி.எஸ்.க்கு ரூ. 3.50 லட்சமும் வசூலிக்கப்படுகிறது. இதில் எந்த விதிமுறைகளும் பின்பற்றப்படவில்லை.
 இந்தக் கட்டணப்படி ஐந்தாண்டுக்கு ரூ. 27.71 லட்சம் நான் செலுத்த வேண்டும். நான் விவசாயக் கூலி வேலை செய்கிறேன். எனது ஆண்டு வருமானம் ரூ. 60 ஆயிரம். அதனால் அந்தத் தொகையை என்னால் செலுத்த முடியாது. இது எனது மகளின் எதிர்கால படிப்பைப் பாதிக்கும்.   எனவே, தமிழக அரசால் நடத்தப்படும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்புக்கு அரசுக் கட்டணத்தை நிர்ணயிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
 இந்த மனு நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு திங்கள்கிழமை (ஜூலை 7) விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

No comments: