Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Tuesday 8 July 2014

தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளை தேசிய மொழிகளாக அறிவிக்கக் கோரி வழக்கு

தமிழ் உள்ளிட்ட 22 மாநில மொழிகளைத் தேசிய மற்றும் அலுவல் மொழிகளாக அறிவிக்கக் கோரும் மனுவுக்கு மத்திய அமைச்சரவைச் செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞர் எஸ்.ராஜமாணிக்கம் தாக்கல் செய்த மனு: மத்திய அரசு ஹிந்தியை தேசிய மற்றும் அலுவல் மொழியாகப் பயன்படுத்தி வருகிறது. ஹிந்திக்கு இணையான தொடர்பு மொழியாக ஆங்கிலம் உள்ளது. சுதந்திரம் பெற்று 67 ஆண்டுகளாக இவ்விரு மொழிகள் மட்டும் மத்திய அரசின் பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இந்தியா குடியரசான பிறகு முதல் 15 ஆண்டுகளுக்கு மட்டுமே இருமொழி பயன்பாடு நீடிக்க வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் வரையறுத்துள்ளது. அதன் பிறகு படிப்படியாக ஹிந்தி பேசாத மாநிலங்களின் மொழிகளையும் தேசிய மற்றும் அலுவல் மொழிகளாக மாற்றுவது குறித்து அரசு முடிவு செய்து அறிவிக்க வேண்டும்.

இந்த நடைமுறையை மத்திய அரசு பின்பற்றவில்லை. மாநில மொழிகளை தேசிய மற்றும் அலுவல் மொழியாக மாற்றுவதன் மூலம் தான் ஹிந்தி பேசாத மாநில மக்களின் அறிவியல், கலாசார, தொழில் தொடர்புகளை வலுப்படுத்த முடியும். எனவே, அரசியலமைப்புச் சட்ட 8-ஆவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள தமிழ் உள்ளிட்ட 22 மாநில மொழிகளைûயும் தேசிய மற்றும் அலுவல் மொழியாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்குமாறு மத்திய அமைச்சரவைச் செயலர் மற்றும் தமிழக தலைமைச் செயலர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

No comments: