பொறியியல் பொதுப் பிரிவு கலந்தாய்வின் முதல் நாளான திங்கள்கிழமை 1,663 மாணவ, மாணவிகள் இடங்களைத் தேர்வு செய்து, கல்லூரி சேர்க்கைக் கடிதங்களைப் பெற்றுச் சென்றனர்.
அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் ஒற்றைச் சாளர பொறியியல் கலந்தாய்வில், பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளன்று கலந்தாய்வில் பங்கேற்க 2,399 மாணவ, மாணவிகள் அழைக்கப்பட்டனர்.
இவர்களில் 463 பேர் இசிஇ பிரிவையும், 376 மாணவ, மாணவிகள் மெக்கானிக்கல் பிரிவையும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவை 271 பேரும், 161 பேர் இஇஇ பிரிவையும், சிவில் பிரிவை 111 பேரும், தகவல் தொழில்நுட்பம் (ஐடி) பிரிவை 109 பேரும், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ருமென்டேஷன் பொறியியல் பிரிவை 53 மாணவ, மாணவிகளும், ஏரோனாட்டில் பிரிவை 37 பேரும், ஆட்டோமொபைல் பிரிவை 24 பேரும், பயோ டெக்னாலஜி பிரிவை 6 பேரும், இதர பிரிவுகளை 79 பேர் என மொத்தம் 1,663 பேர் இடங்களைத் தேர்வு செய்து கல்லூரி சேர்க்கைக் கடிதங்களைப் பெற்றுச் சென்றனர்.
கலந்தாய்வில் பங்கேற்றவர்களில் 6 பேர், இடங்களைத் தேர்வு செய்வதைத் தவிர்த்து விட்டனர். 730 பேர் கலந்தாய்வுக்கு வரவில்லை.
கல்லூரி சேர்க்கைக் கடிதம் பெற்றவர்களில் 865 பேர் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் இடங்களைத் தேர்வு செய்துள்ளனர். 683 பேர் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகளிலும், 115 பேர் சுயநிதி பொறியியல் கல்லூரிகளிலும் இடங்களைத் தேர்வு செய்துள்ளனர்.
மெக்கானிக்கல் பிரிவை தேர்வு செய்த 55 பேர்: பொறியியல் தரவரிசைப் பட்டியலில் 200-க்கு 200 கட்-ஆஃப் பெற்று முதலிடம் பெற்றவர்களில் அதிகமானோர் மெக்கானிக்கல் பிரிவையே தேர்வு செய்துள்ளனர்.
பொதுப் பிரிவு கலந்தாய்வின் முதல் நாளில் 200-க்கு 200 கட்-ஆஃப் பெற்ற 163 பேர் முதலில் பங்கேற்று இடங்களைத் தேர்வு செய்து, சேர்க்கைக் கடிதங்களைப் பெற்றுச் சென்றனர். இவர்களில் 55 பேர் மெக்கானிக்கல் பிரிவைத் தேர்வு செய்தனர். இதற்கு அடுத்தபடியாக இசிஇ பிரிவை 46 மாணவர்களும், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவை 38 மாணவர்களும், இஇஇ பிரிவை 16 பேரும், சிவில் பிரிவை 5 மாணவர்களும், ஏரோனாட்டிகல் பிரிவை இருவரும் தேர்வு செய்தனர்.
மெக்கானிக்கல் பிரிவை தேர்வு செய்த 55 பேரில் இருவர் மாணவிகள், 14 பேர் முதல் தலைமுறை மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment