சென்னையில் தொடங்கப்பட்டுள்ள நகர்ப்புற பொது இ-சேவை மையங்கள் விளைவாக, ஜாதி சான்றிதழ் உள்பட பல்வேறு சான்றிதழ்களைப் பெற மக்கள் அரசு அலுவலகங்களுக்குச் சென்று காத்திருக்கும் சிரமம் குறைந்துள்ளது.
அரசின் அனைத்துச் சேவைகளும், மக்களின் இருப்பிடத்துக்குக் கொண்டு சேர்க்கும் வகையில் மின் ஆளுமைத் திட்டத்துக்கு, தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதன்படி, ஓவ்வோர் அரசுத் துறையும் இணையதளத்தில் இணைக்கப்பட்டு, அந்தத் துறை சார்ந்த அனைத்து சேவைகளும் மக்களுக்கு கொண்டு சேர்க்கப்படுகின்றன.
அந்த வகையில், கடந்த பிப்ரவரி 25-ஆம் தேதி தமிழக அரசின் தகவல் தொழில் நுட்பவியல் துறையின் மூலம் சென்னையில் 14 இடங்களில் நகர்ப்புற இ-சேவை மையங்கள் தொடங்கப்பட்டன. தமிழகத்தின் 25 மாவட்டங்களில் மின் மாவட்ட திட்டமும் தொடங்கப்பட்டது. இந்த பொது இ-சேவை மையங்கள் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட்டு வருகின்றன.
என்னென்ன சேவைகள்? இந்த மையங்களில் முதல் கட்டமாக வருவாய்த் துறையின் சேவைகளான குடும்பத்தில் யாரும் பட்டதாரி இல்லை என்பதற்கான சான்றிதழ், கணவரால் கைவிடப்பட்டோருக்கான சான்றிதழ், வருமான சான்றிதழ், ஜாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் போன்றவையும், சமூக நலத்துறையின் பல்வேறு திருமண உதவித் தொகைத் திட்டங்களுக்கான சேவைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், இந்த மையங்களில் மின்கட்டணங்களையும் செலுத்த முடியும்.
சென்னையில் 14 இடங்கள்: சென்னை மயிலாப்பூர், மாம்பலம், எழும்பூர் ஆகிய தாலுகா அலுவலகங்கள், சைதாப்பேட்டை, அசோக்நகர் ஆகிய குடிநீர் வாரிய மண்டல அலுவலகங்கள், அடையாறு, ராயபுரம், அண்ணாநகர் ஆகிய மாநகராட்சி மண்டல அலுவலகங்கள், புதுப்பேட்டை நகர்ப்புற கடன் சங்கம், சோழிங்கநல்லூர், அய்யப்பன்தாங்கல், நாவலூர், கோவூர், கோலப்பாக்கம் தொடக்க வேளாண்மைச் சங்கங்கள் ஆகிய இடங்களில் நகர்ப்புற பொது இ-சேவை மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
கம்ப்யூட்டர் திரை: பொது இ-சேவை மையங்களில் வழங்கப்படும் சான்றிதழ்களில் பிழைகள் இல்லாமல் இருப்பதற்காக பயனாளிகள் தங்களது விவரங்களை அங்குள்ள கூடுதல் கணினித் திரையில் அலுவலர்கள் பதிவு செய்யும் போதே சரிபார்த்துக் கொள்ள முடியும்.
செல்பேசிக்கு எஸ்.எம்.எஸ்.: சான்றிதழ்களுக்கு விண்ணப்பித்த 3 முதல் 4 நாள்களுக்குள் பயனாளிகள் குறிப்பிட்ட அனைத்து விவரங்களும் சரிபார்க்கப்பட்டு, அவர்களது சான்றிதழ் தயாரானால் பயனாளிகளின் செல்பேசிக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் தெரிவிக்கப்படும்.
அதன் பிறகு பயனாளிகள் தாங்கள் விண்ணப்பித்த மையங்களுக்கு நேரடியாகச் சென்று சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
பயனாளிகளின் குழந்தைகளை பள்ளிகளில் உடனடியாகச் சேர்க்க வருமானச் சான்று தேவைப்பட்டாலோ, மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு கிசிச்சை அளிக்க வருமானச் சான்று தேவைப்பட்டாலோ அவர்களுக்கு முன்னுரிமை அளித்து சான்றுகள் வழங்கப்படுகின்றன.
நாளொன்றுக்கு 50 விண்ணப்பங்கள்: பொது இ-சேவை மையங்களில் நாளொன்றுக்கு 50 முதல் 60 விண்ணப்பங்கள் பயனாளிகளிடமிருந்து பெறப்படுகின்றன. விண்ணப்பங்களை பெற்றவுடன் பயனாளிகளுக்கு அதற்கான ஒப்புகைச் சீட்டு வழங்கப்படுகிறது.
பயனாளிகள் விண்ணப்பிக்கும் ஒவ்வொரு சேவைக்கும் விண்ணப்பக் கட்டணமாக ரூ.50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் குறித்து பயனாளிகள் கூறியது:
பல்வேறு வகையான சான்றுகள் ஒரே இடத்தில் வழங்கப்படுவதால் மக்கள் பல்வேறு அரசு அலுவலகங்களுக்குச் சென்று காத்திருக்கும் சிரமம் குறைந்துள்ளதோடு, நேர விரயமும் தவிர்க்கப்படுகிறது.
மேலும், தேவையான ஆவணங்களைச் சமர்ப்பித்தால் சான்றிதழ்கள் விரைவாக வழங்கப்படுகின்றன. இந்த திட்டத்தை அதிக இடங்களுக்கு விரிவுபடுத்தினால் மேலும் பலர் பயனடைவார்கள் என்று தெரிவித்தனர்.
No comments:
Post a Comment