தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மூன்றாம் கட்டக் கலந்தாய்வு செப்டம்பர் 6-ஆம் தேதி தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை உள்பட 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 2,108 எம்.பி.பி.எஸ். இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு 563-க்கும் மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியின் பி.டி.எஸ். இடங்கள், சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளின் 1,020 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்கள் என அனைத்திலும் மாணவர்களைச் சேர்க்க இதுவரை இரண்டு கட்டக் கலந்தாய்வு நடந்து முடிந்துள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில், ஜூலை 21-ஆம் தேதி முதல் ஜூலை 25-ஆம் தேதி வரை எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இரண்டாம் கட்டக் கலந்தாய்வு நடைபெற்றது. இந்தக் கலந்தாய்வில் காலியிடங்கள், புதிதாக அனுமதி கிடைத்த இடங்கள் என அனைத்தும் நிரப்பப்பட்டன. இரண்டாம் கட்டக் கலந்தாய்வில் பங்கேற்று அனுமதிக் கடிதம் பெற்ற மாணவர்கள் உரிய கல்லூரிக்கு ஆகஸ்ட் 1-ஆம் தேதி செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
செப்டம்பர் 6 முதல்... எம்.பி. பி.எஸ்., பி.டி.எஸ். மொத்த இடங்களில் 15 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு ஒதுக்கப்படுகிறது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு உரிய இடங்களுக்கு இன்னும் இரண்டு கட்டக் கலந்தாய்வுகள் நடைபெற வேண்டியுள்ளது.
எனவே, அகில இந்திய ஒதுக்கீட்டுக் கலந்தாய்வு நிறைவடைந்து காலியாகும் இடங்கள், இரண்டாம் கட்டக் கலந்தாய்வில் பங்கேற்று அனுமதிக் கடிதம் பெற்ற மாணவர்கள், மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகளில் ஆகஸ்ட் 1-ஆம் தேதி சேராமல் போவதால் ஏற்படும் காலியிடங்கள் ஆகியவை மூன்றாம் கட்டக் கலந்தாய்வில் நிரப்பப்படும்.
நடப்புக் கல்வியாண்டில், எம்.பி.பிஎஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க சென்னை தாகூர் மருத்துவக் கல்லூரி, மாங்காடு ஸ்ரீ முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரி, மாதா மருத்துவக் கல்லூரி, திருச்சி அருகே உள்ள சென்னை (எஸ்ஆர்எம்) மருத்துவக் கல்லூரி, சேலம் அன்னபூர்ணா மருத்துவக் கல்லூரி ஆகிய 5 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு இதுவரை இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.) அனுமதி அளிக்கவில்லை.
இந்தக் கல்லூரிகளுக்கு எம்.சி.ஐ. அனுமதி அளிக்கும் நிலையில், அவை சமர்ப்பிக்கும் 400-க்கும் மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களும் மூன்றாம் கட்டக் கலந்தாய்வில் நிரப்பப்படும். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் செப்டம்பர் 6-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை மூன்றாம் கட்டக் கலந்தாய்வு நடைபெறும்.
இந்திய மருத்துவக் கவுன்சிலின் (எம்.சி.ஐ.) விதிகளின்படி செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் மருத்துவ மாணவர் சேர்க்கையை முடிக்க வேண்டும்.
No comments:
Post a Comment