Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, 28 July 2014

TNEA : ஒரு வாரத்தில் முடிகிறது பி.இ. கலந்தாய்வு: கடந்த ஆண்டைவிட வெகுவாகக் குறைந்தது மாணவர் சேர்க்கை

பொறியியல் கலந்தாய்வு முடிய இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், இதுவரை 77,411 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. ஒரு லட்சத்து 26 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளன.
நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர் சேர்க்கை நடைபெற்றிருப்பது கல்லூரி நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

2014-15 கல்வியாண்டில் மொத்தமுள்ள 534 பொறியியல் கல்லூரிகளில் 2,87,646 இடங்கள் உள்ளன. இவற்றில் அரசு ஒதுக்கீட்டிலான இடங்கள் 1,81,941 ஆகும்.
சில சுயநிதி பொறியியல் கல்லூரிகள் மாணவர் சேர்க்கை நடைபெறுமோ என்ற அச்சத்தில் 28,712 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களையும் கலந்தாய்வுக்கு ஒப்படைத்தன.
இதன் காரணமாக, 2014-15 கல்வியாண்டில் ஒற்றைச் சாளரக் கலந்தாய்வில் 2,10,653 இடங்கள் இடம்பெற்றன. இதில் வெளிநாடுவாழ் இந்தியர்கள், தொழில் நிறுவன ஒதுக்கீடு என பல்வேறு ஒதுக்கீடுகள் போக, ஜூலை 7-ஆம் தேதி தொடங்கிய பொதுப் பிரிவு கலந்தாய்வில் 2 லட்சத்து 4 ஆயிரத்து 79 இடங்கள் இருந்தன.
ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை பொதுப் பிரிவு கலந்தாய்வு நடைபெறுகிறது. கலந்தாய்வு முடிய இன்னும் 7 நாள்களே உள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) வரை கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்ட 1,12,732 பேரில் 77,411 பேர் மட்டுமே இடங்களைத் தேர்வு செய்து, கல்லூரி சேர்க்கைக் கடிதத்தைப் பெற்றுச் சென்றனர். 35,010 பேர் கலந்தாய்வில் பங்கேற்பதை தவிர்த்துவிட்டனர். 311 பேர் கலந்தாய்வில் பங்கேற்றபோதும், இடங்களைத் தேர்வு செய்வதைத் தவிர்த்துவிட்டனர்.
பொறியியல் மாணவர் சேர்க்கையைப் பொருத்தவரை இப்போதைய பொறியியல் படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவர்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டைவிட வெகுவாகக் குறைந்துள்ளது.
கடந்த 2013-14 ஆம் ஆண்டில், கலந்தாய்வு முடிய ஒரு வாரம் இருந்த போது ஒரு லட்சத்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பொறியியல் இடங்களைத் தேர்வு செய்து, கல்லூரி சேர்க்கை கடிதங்களை பெற்றுச் சென்றிருந்தனர்.
அதுவரை மொத்தம் அழைக்கப்பட்டிருந்த 1,45,500 பேரில் 40,500 பேர் கலந்தாய்வில் பங்கேற்பதைத் தவிர்த்திருந்தனர். அதுமட்டுமின்றி 100 கல்லூரிகளில் 90 சதவீத இடங்கள் நிரம்பியிருந்தன.
ஆனால், இந்த முறை அண்ணா பல்கலைக்கழகத் துறைகள், அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், ஒரு சில பிரபல தனியார் பொறியியல் கல்லூரிகளில் மட்டுமே 90 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன.
மற்ற கல்லூரிகளில், பெரும்பாலானவற்றில் மிகக் குறைவான மாணவர் சேர்க்கையே நடந்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர் சேர்க்கை நிகழ்ந்துள்ளன.
அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வு காலியிட விவரத்தின் அடிப்படையில், சென்னை மாவட்டத்தைப் பொருத்தவரை மொத்தமுள்ள 7 கல்லூரிகளில் ஒரு கல்லூரியில் மிகக் குறைவான மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் 20 கல்லூரிகளிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 20 கல்லூரிகளிலும், கோவையில் 35 கல்லூரிகளிலும், ஈரோட்டில் 10 கல்லூரிகளிலும், மதுரையில் 10 கல்லூரிகளிலும், சேலத்தில் 13 கல்லூரிகளிலும் மிகக் குறைவான மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளது.
இந்தக் கல்லூரிகளில் பெரும்பாலும் கணினி அறிவியல், பி.இ. தகவல் தொழில்நுட்பம், இசிஇ படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடைபெறாமல் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு ஒதுக்கீட்டின் கீழ் மொத்தமுள்ள 2 லட்சத்து 4 ஆயிரத்து 79 இடங்களில் இப்போது ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 668 இடங்கள் காலியாக உள்ளன.

No comments: