தமிழகத்தில் 4 பொறியியல் கல்லூரிகள் உள்பட 52 புதிய கல்லூரிகளின் உள்கட்டமைப்புக்காக ரூ.652.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.
சட்டப் பேரவையில் உயர்கல்வி, பள்ளிக் கல்வித் துறைகளின் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் வியாழக்கிழமை பங்கேற்றுப் பேசினார், எதிர்க்கட்சி துணைத் தலைவர் அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ். அவர் பேசுகையில், புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், அந்தக் கல்லூரிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி போதுமா? எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? என்று கேட்டார்.
இதற்குப் பதிலளித்து அமைச்சர் பழனியப்பன் பேசியது:
தமிழகத்தில் புதிதாக நான்கு பொறியியல் கல்லூரிகளும், 11 பாலிடெக்னிக் கல்லூரிகளும், 24 பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளும், 13 கலை-அறிவியல் கல்லூரிகளும் கடந்த மூன்று ஆண்டு காலத்தில் தொடங்கப்பட்டுள்ளன. இந்தக் கல்லூரிகளின் உட்கட்டமைப்புக்கென நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பொறியியல் கல்லூரிகளுக்கு ரூ.212 கோடியும், பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு ரூ.172 கோடியும், பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளுக்கு ரூ.174 கோடியும், கலை-அறிவியல் கல்லூரிகளுக்கு ரூ.94.25 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என்றார்.
ஒரு அரசு பொறியியல் கல்லூரிகூட இல்லை: விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய அழகாபுரம் மோகன்ராஜ், தமிழகத்தில் புற்றீசல் போன்று கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. எனவே, அந்தக் கல்லூரிகளில் சேரும் கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வி படிக்கும்போது அவர்களுக்கு ஆங்கிலம் பேசுவது தடையாக இருக்கிறது, அதற்கான பயிற்சியை கல்லூரிகளில்
அளிக்க வேண்டும் என்றார்.
இதைத் தொடர்ந்து, அமைச்சர் பழனியப்பன் அளித்த பதில்:
பொறியியல் படிப்புகளில் சேரும் கிராமப்புற மாணவர்களின் ஆங்கில பயிற்சிக்காக, அவர்களுக்கென ஆங்கில பயிற்சி மேம்பாட்டு மையம், கல்லூரிகளில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் எந்தவொரு இடத்திலும் புற்றீசல் போன்று கல்லூரிகள் ஆரம்பிக்கப்படவில்லை.
கல்லூரிகள் தொடங்குவதற்கான அனுமதியை மாநில அரசு அளிப்பதில்லை. ஆனாலும், ஏழை மாணவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு நான்கு அரசு பொறியியல் கல்லூரிகள் கடந்த மூன்று ஆண்டுகளில் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால், திமுக ஆட்சியில் ஒரு அரசு பொறியியல் கல்லூரிகூட ஆரம்பிக்கப்படவில்லை
என்றார்.
அப்போது, பேரவைக்குள் நுழைந்த திமுக உறுப்பினர் துரைமுருகன், வேலூரில் ஒரு கல்லூரி தொடங்கப்பட்டது என்றார். இதற்கு பதிலளித்த அமைச்சர் பழனியப்பன், அந்தக் கல்லூரி பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியாகத் தொடங்கப்பட்டது. பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிக்கும், அரசு கல்லூரிக்கும் வித்தியாசம் உள்ளது.
பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரி என்றால், அந்தக் கல்லூரிக்கான செலவினங்களை 5 ஆண்டுகளுக்கு தமிழக அரசு ஏற்றுக் கொள்ளும். அரசு பொறியியல் கல்லூரி என்றால் அதற்கான செலவு முழுவதையும் அரசே ஏற்றுக் கொள்கிறது என்று விளக்கம் அளித்தார்.
No comments:
Post a Comment