மத்திய தேர்வாணையத் தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்த வலியுறுத்தி, சென்னையில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தை முற்றுகையிட்ட 216 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
மத்திய அரசுப் பணிகளில் தமிழர் வேலைவாய்ப்பு பறிப்புக்கு எதிரான கூட்டியக்கம் சார்பில் இந்த முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
மத்திய அரசு நிறுவனங்களில் ஏற்படும் காலிப் பணியிடங்கள், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்படுகிறது. இந்தத் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழிகளில் மட்டுமே நடைபெறுகின்றன. இதனால் பிற மொழியினர் தேர்வு எழுதுவதில் சிரமம் ஏற்படுகிறது.
2014-ஆண்டு வரை சுங்கத்துறை, கலால்துறை, வருமான வரித்துறை ஆகியவற்றில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வுகளில் தென்மாநிலத்தவர்கள் குறைந்த அளவிலேயே தேர்வாகியுள்ளனர். குறிப்பாக தமிழகத்திலிருந்து தேர்தெடுக்கப்பட்டவர்கள் மிகவும் குறைவு.
இதனைப்போக்க அந்தந்த மாநில மொழிகளில் தேர்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தி இந்த முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற திராவிடர் விடுதலை கழகம், தமிழக வாழ்வுரிமை கட்சி, மனித நேய மக்கள் கட்சி, தந்தை பெரியார் திராவிடர் கழகம், மே 17 இயக்கம், இளம் தமிழகம் இயக்கம், தமிழ்நாடு மக்கள் கட்சி ஆகியற்றை சேர்ந்த 216 பேர் கைது செய்யப்பட்டனர்.
No comments:
Post a Comment