பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான வெயிட்டேஜ் மதிப்பெண்ணில் திருத்தம் கோரி 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சிறப்பு முகாம்களுக்கு வந்தனர்.
இவர்களில் சரியான ஆவணங்களுடன் வந்த சுமார் 600 பேரின் மதிப்பெண்ணில் திருத்தம் செய்யப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான தேர்வுப் பட்டியல் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் கொண்ட தேர்வுப் பட்டியல் சில தினங்களில் வெளியிடப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள், சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற 43 ஆயிரத்து 242 பேரின் வெயிட்டேஜ் மதிப்பெண் விவரங்களை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலை 14-ஆம் தேதி வெளியிட்டது.
இந்த மதிப்பெண்ணில் திருத்தம் தேவைப்படுவோருக்காக விழுப்புரம், மதுரை, சேலம், திருச்சி ஆகிய இடங்களில் ஜூலை 21 முதல் 26 வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இந்த முகாம்களுக்கு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இடைநிலை ஆசிரியர் நியமனத்துக்காக, ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்ச்சி பெற்ற சுமார் 30 ஆயிரம் பேருக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் விவரம் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.
No comments:
Post a Comment