பொதுத் தேர்வில் தேர்ச்சி குறைவாக உள்ள அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடன் அமைச்சர் வீரமணி ஆலோசனை நடத்த உள்ளார். ஆகஸ்ட் 13 முதல் 8 மண்டலங்களில் இந்தக் கூட்டம் நடக்கவுள்ளது.
கடந்த கல்வியாண்டில் (2013-14) எஸ்எஸ்எல்சி மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் 70 சதவீதத்துக்கும் குறைவாக தேர்ச்சி பெற்ற அரசு உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி ஆலோசனை நடத்த உள்ளார். இதற்கான ஆய்வுக் கூட்டம் மண்டல வாரியாக திருவள்ளூர், விழுப்புரம், கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திண்டுக்கல், கோவை, தூத்துக்குடி ஆகிய 8 மையங்களில் ஆகஸ்ட் 13 முதல் செப்டம்பர் 1-ம் தேதி வரை வெவ்வேறு நாட்களில் நடக்க உள்ளது. இந்தக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா, பள்ளிக்கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வர முருகன் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி, கூடுதல் முதன்மைக் கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள். இதில் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்வதுடன், எதிர்காலத்தில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.
No comments:
Post a Comment