தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையத்தை 3 மாதங்களுக்குள் அமைக்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் என்.ராஜாராமன் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். தமிழ்நாட்டில் மாநில எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்தை உரிய கால வரம்புக்குள் அமைக்கும்படி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அவர் தனது மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு மீது தற்காலிக தலைமை நீதிபதி சதீஷ் கே.அக்னிஹோத்ரி, நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தமிழ்நாட்டில் எஸ்.சி., எஸ்.டி. ஆணையத்தை அமைப்பதற்கான தீவிரமான நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருவதாகவும், இந்த விவகாரத்தில் இறுதி முடிவெடுக்க இன்னும் 3 மாத கால அவகாசம் தேவைப்படுவதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து தமிழக அரசுக்கு 3 மாத கால அவகாசம் அளித்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த 3 மாத காலத்துக்குள் மாநில எஸ்.சி., எஸ்.டி. ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்று இம்மாதம் 14-ம் தேதி பிறப்பித்த உத்தரவில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment