இந்தியாவின் 1,000 தனியார் பள்ளிகளிலுள்ள ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், 17 வயதான மலாலா யூசுப் சாயின் வாழ்க்கை வரலாற்றைப் பாடமாக படிக்கவுள்ளனர்.
பாகிஸ்தானின் ஸ்வாட் பள்ளத்தாக்கில் பெண் கல்விக்கு ஆதரவாக பேசிய மலாலாவைத் தலிபான்கள் துப்பாக்கியால் சுட்டனர். இந்த சம்பவம், உலகம் முழுவதும் அதிர்ச்சியலையை ஏற்படுத்த, ஐ.நா மற்றும் பல்வேறு உலக அமைதி அமைப்புகள் மலாலாவிற்கும் பெண் கல்விக்கும் ஆதரவு அளித்தனர். இதன் தொடர்ச்சியாக, பெண் கல்விக்காக குரல் கொடுத்த சிறுமி என்று உலகையே தன் பக்கம் திரும்பிப்பார்க்க வைத்தார், மலாலா.
தனியார் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கும் ‘டிஸ்கவரி எஜுகேஷன்’ என்ற தனியார் நிறுவனம் தமது ‘XSEED’ பாடப்புத்தக வரிசையில் மலாலா பற்றிய பாடத்தைச்சேர்த்துள்ளனர். ஆறு பக்கங்கள் கொண்ட இந்த பாடம், புத்தகத்தின் 100-வது பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.
ஸ்வாட் பள்ளத்தாக்கில் பள்ளிகளை தகர்ப்பதிலும், பெண் கல்வியை எதிர்ப்பதிலும் தலிபான்களின் கை ஓங்கியிருந்தது. அங்கு மலாலாவின் பால்ய காலங்களை வர்ணிக்கும் வகையில் துவங்குகிறது இப்பாடம். தனது 11-வது வயதில், பெண்களுடைய உரிமைகளுக்காக, குறிப்பாக இளம்பெண்களுடைய உரிமைகளுக்கு குரல் கொடுக்க துவங்கினார். மேலும், பெண் கல்வியை ஆதரித்து பேசியதால், தீவிரவாதிகளிடமிருந்து தொடர்ந்து மலாலா சந்தித்துவந்த அச்சுறுத்தல்களைப் பற்றியும் விவரிக்கிறது இப்பாடம்.
இப்பாடத்தின் ஒரு பகுதியாக, மலாலாவின் பள்ளி காலம், அவருக்கு பாகிஸ்தான் பிரதமர் யூசப் ராசா கிலானியிடமிருந்து கிடைத்தஅங்கீகாரம், இங்கிலாந்தில் அவர் எடுத்துக்கொண்ட சிகிச்சை, ஐ.நா.வில் அவர் ஆற்றிய உரை போன்ற புகைப்படங்களும் இணைக்கப்பட்டுள்ளன.
சோகமானவள் (grief-stricken) என்று பொருள்படும் ‘மலாலா’ பெயரைக்கொண்டுள்ள இச்சிறுமி, உலகில் உள்ள பல கோடி மக்களுக்கு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் அளிக்கும் அடையாளம் என்று கூறி முற்றுப்பெறுகிறது இப்பாடப்பகுதி.
No comments:
Post a Comment