Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, 17 July 2014

எம்.பி.பி.எஸ். 2-ஆம் கட்டக் கலந்தாய்வு: அட்டவணை இன்று வெளியீடு

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். மாணவர் சேர்க்கைக்கான இரண்டாம் கட்டக் கலந்தாய்வு அட்டவணை வியாழக்கிழமை (ஜூலை 17) வெளியிடப்படுகிறது.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். இரண்டாம் கட்டக் கலந்தாய்வு வரும் திங்கள்கிழமை (ஜூலை 21) தொடங்கி 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சுகாதாரத் துறையின் இணையதளம் ஜ்ஜ்ஜ்.ற்ய்ட்ங்ஹப்ற்ட்.ர்ழ்ஞ்- இல் கலந்தாய்வு அட்டவணை வியாழக்கிழமை வெளியிடப்படுகிறது.

எத்தனை இடங்களுக்கு கலந்தாய்வு? திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியின் 100 இடங்கள், திருச்சி அரசு மருத்துவக் கல்லூரியின் கூடுதல் 50 இடங்கள், சேலம் அரசு மருத்துவக் கல்லூரியின் 25 இடங்கள் என மொத்தம் 175 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.) அண்மையில் அனுமதி அளித்துள்ளது. இவற்றிலிருந்து தமிழக ஒதுக்கீட்டுக்கு மொத்தம் 149 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைத்துள்ளன.
இதே போன்று சென்னை கே.கே. நகர் இஎஸ்ஐசி மருத்துவக் கல்லூரியின் 100 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும் எம்.சி.ஐ. அனுமதி அளித்துள்ளது. சுயநிதி அரசு ஒதுக்கீட்டின் கீழ் இந்தக் கல்லூரியிலிருந்து 65 எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைத்துள்ளன.
முதல்கட்டக் கலந்தாய்வில் பங்கேற்று எம்.பி.பி.எஸ். படிப்பில் சேராமல் பி.இ. படிப்பில் மாணவர்கள் சேர்ந்ததால் சுமார் 30 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளன. எனவே, மொத்தம் 244 எம்.பி.பி.எஸ். இடங்களில் மாணவர்களைச் சேர்க்க இரண்டாம் கட்டக் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.
பி.டி.எஸ். காலியிடங்கள்: கடந்த ஜூன் 17-ஆம் தேதி முதல் ஜூன் 22-ஆம் தேதி வரை நடைபெற்ற முதல்கட்டக் கலந்தாய்வில், சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 85 பி.டி.எஸ். இடங்களிலும் சேர மாணவர்கள் அனுமதிக் கடிதம் பெற்றனர். இதில் பி.டி.எஸ். படிப்பில் சேராததால், பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் ஏற்பட்டுள்ள 15 காலியிடங்கள் இரண்டாம் கட்டக் கலந்தாய்வின்போது நிரப்பப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அரசு ஒதுக்கீடு: தமிழகத்தில் செயல்படும் 18 சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பித்துள்ள 950-க்கும் மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்கள் இரண்டாம் கட்டக் கலந்தாய்வில் நிரப்பப்பட உள்ளன. அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களுக்கான கலந்தாய்வு ஜூலை 23-ஆம் தேதி தொடங்கி ஜூலை 25-ஆம் தேதி வரை நடைபெறும்.
சுயநிதி அரசு எம்.பி.பி.எஸ். இடங்களின் நிலை என்ன?
சென்னை தாகூர் மருத்துவக் கல்லூரி, சென்னை மாங்காடு ஸ்ரீ முத்துக்குமரன் மருத்துவக் கல்லூரி, சென்னை மாதா மருத்துவக் கல்லூரி, திருச்சி அருகே உள்ள சென்னை (எஸ்ஆர்எம்) மருத்துவக் கல்லூரி, சேலம் அன்னபூர்ணா மருத்துவக் கல்லூரி ஆகிய 5 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் 750 எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு (தலா 150 இடங்கள்) புதுப்பித்தல் அனுமதியை எம்.சி.ஐ. அளிக்கவில்லை. இதன் விளைவாக இரண்டாம் கட்டக் கலந்தாய்வுக்கு 400 சுயநிதி அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலே குறிப்பிட்ட 5 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கும் ஆய்வுக்கான காலக்கெடு கடந்த ஜூன் 15-ஆம் தேதியுடன் முடிவடைந்து விட்டதால், ஒப்புதல் குறித்த பரிசீலிக்க முடியாது என இந்திய மருத்துவக் கவுன்சில் நிர்வாகக் குழு தெரிவித்து விட்டது.
இந்நிலையில் கடந்த ஆண்டைப் போலவே இந்த சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் உச்ச நீதிமன்றம் வரை சென்று ஆணைகளைப் பெற்ற பிறகே நடப்புக் கல்வி ஆண்டில் (2014-15) எம்.பி.பி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று மருத்துவக் கல்வியாளர்கள் தெரிவித்தனர்.
எம்.பி.பி.எஸ். காத்திருப்போர் பட்டியலில் 1,860 மாணவர்கள்
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கான காத்திருப்போர் பட்டியலில் 1,860 மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் கடந்த ஜூன் 17-ஆம் தேதி தொடங்கி ஜூன் 22-ஆம் தேதி முதல் கட்ட எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். கலந்தாய்வு முடிந்த பிறகு, பல்வேறு சமூகப் பிரிவைச் சேர்ந்த 1,860 மாணவர்கள் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.
அரசு மருத்துவக் கல்லூரிகளின் எம்.பி.பி.எஸ். இடங்களைப் பொருத்தவரை 1,460 மாணவர்களும், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களைப் பொருத்தவரை 400 மாணவர்களும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர்.
காத்திருப்போருக்கு அழைப்புக் கடிதம் வராது: சென்னையில் வரும் 21-ஆம் தேதி தொடங்கும் எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். இரண்டாம் கட்டக் கலந்தாய்வில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள 1,860 மாணவர்களுக்கே முன்னுரிமை தரப்படும். இரண்டாம் கட்டக் கலந்தாய்வு அட்டவணையைப் பார்த்து, கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் குறிப்பிட்ட தேதியில் காத்திருப்போர் பட்டியலில் உள்ள மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கலாம். காத்திருப்போர் பட்டியலில் உள்ள மாணவர்களுக்கு அழைப்புக் கடிதம் எதுவும் அனுப்பப்பட மாட்டாது என்று மருத்துவக் கல்வி உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதே சமயம் சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளின் 950-க்கும் மேற்பட்ட அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களில் சேரத் தகுதியுள்ள மாணவர்களுக்கு அழைப்புக் கடிதம் அனுப்பப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.

No comments: