Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, 17 July 2014

TNPSC: ஒருங்கிணைந்த பொறியாளர் பணிக்கான நேர்முகத் தேர்வு பட்டியலில் முறைகேடு

ஒருங்கிணைந்த பொறியாளர் பணிக்காக வெளியிடப்பட்ட புதிய நேர்முகத் தேர்வுப் பட்டியலில் முறைகேடு நடந்திருப்பதால் புதிய பட்டியலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவுக்கு வரும் 22-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு டி.என்.பி.எஸ்.சி.க்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவைச் சேர்ந்த எம்.முனீஸ்வரன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24-ஆம் தேதி ஒருங்கிணைந்த  பொறியாளர் பணிக்கானத் தேர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது.

நான் பி.இ. (சிவில்) முடித்துள்ளேன். அந்தத் தேர்வுக்கு நான் விண்ணப்பித்தேன். கடந்த ஆண்டு மார்ச் மாதம் 2-ஆம் தேதி தேர்வு நடந்தது. அதில், தேர்ச்சி பெற்றவர்கள் தாற்காலிகமாக பணியில் நியமிக்கப்பட்டு, பிறகு நேர்முகத் தேர்வு நடத்தி பணியில் அமர்த்தப்படுவார்கள் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்தது. இதில், அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றேன்.
இதற்கான முதல் நேர்முகத் தேர்வு வரும் 27-ஆம் தேதி நடைபெறுகிறது. அதற்கான தாற்காலிகப் பட்டியலை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது. அதில் என் பெயர் இடம்பெற்றிருந்தது.
இந்த நிலையில் அந்தப் பட்டியலை திருத்தி, புதிய பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், என் பெயர் இடம் பெறாமல், வேறு சிலரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. அவர்கள் அனைவரும் என்னை விடக் குறைவான மதிப்பெண்கள் பெற்றவர்கள்.
நேர்முகத் தேர்வுப் பட்டியல் வெளியிட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன.
எனவே, புதிதாக வெளியிடப்பட்ட தேர்வுப் பட்டியல் மீது நேர்முகத் தேர்வு நடத்துவதற்கு தடைவிதிக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி ஆர்.ராமநாதன் முன்பு புதன்கிழமை (ஜூலை 16) விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு 22-ஆம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு டி.என்.பி.எஸ்.சி.க்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

No comments: