Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, 17 July 2014

தொடக்கக் கல்வி ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ கலந்தாய்வில் பங்கேற்றவர்கள் குறைவு

இடைநிலை ஆசிரியர்களுக்கான காலிப் பணியிடங்கள் குறைவாக உள்ளதால், தொடக்கக் கல்வி ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ கலந்தாய்வில், பங்கேற்ற மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
தொடக்க கல்வி ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ கலந்தாய்வு, கடந்த 12ம் தேதி வரை, மாவட்ட வாரியாக உள்ள ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் நடந்தது. தமிழகம் முழுவதும், 29 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் எட்டு அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், 2,600 இடங்கள், 454 தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் அரசு ஒதுக்கீட்டுக்கான, 10 ஆயிரம் இடங்கள், 42 அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில், 1,600 இடங்கள் என, 14 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்கள் கலந்தாய்வில் இருந்தன.
இருப்பினும், கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பித்திருந்த, 4,520 மாணவர்களில், 2,400 பேர் மட்டுமே பங்கேற்றனர். கோவை மாவட்டத்தில், 68 மாணவர்களே கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பித்திருந்தனர்.

மற்ற மாவட்ட கலந்தாய்வு அடிப்படையில், கோவை அரசு தொடக்க கல்வி பயிற்சி நிறுவனத்தில், மொத்தமுள்ள இடங்களில், 120 இடங்கள் நிரப்பப்பட்டு விட்டன. தவிர, மாவட்டத்தில் உள்ள இரு அரசு உதவி பெறும் பயிற்சி நிறுவனங்கள் மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள், போதிய மாணவர் சேர்க்கையின்றி தவித்து வருகின்றன.
தனியார் கல்லுாரிகளில் சொற்ப எண்ணிக்கையில் சேரும் மாணவர்களும், அரசு ஒதுக்கீட்டிலே படிக்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், மாவட்டந்தோறும் சேர்க்கையின்றி தவிக்கும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை நிரந்தரமாக மூட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு, இடைநிலை ஆசிரியர்களுக்கான காலிப் பணியிடங்கள் குறைந்த எண்ணிக்கையில் இருப்பதே காரணம் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கோவை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் திருஞானசம்பந்தம் கூறுகையில், "அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் படிக்கவே, கலந்தாய்வில் பங்கேற்ற பெரும்பாலான மாணவர்கள் விரும்பம் தெரிவித்தனர். இதனால், அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்களில், பெரும்பாலான இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது" என்றார்.
2 லட்சம் பேர் வேலைக்கு காத்திருப்பு
இடைநிலை ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் சிலர் கூறுகையில், "தொடக்கக் கல்வி ஆசிரியர் பயிற்சி டிப்ளமோ முடித்தவர்கள், இடைநிலை ஆசிரியர்களாக, அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பணி நியமனம் பெற முடியும்.
தமிழகம் முழுவதும் ஏற்கனவே, 2 லட்சத்துக்கும் அதிகமானோர், இந்த டிப்ளமோ படிப்பை முடித்து, வேலைவாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். தவிர, இடைநிலை ஆசிரியர்களுக்கான காலிப்பணியிடம் குறைவு என்பதால், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களே, ஆசிரியர் டிப்ளமோ படிப்பில் சேர ஆர்வம் காட்டுகின்றனர்" என்றனர்.

No comments: