அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய மொத்த எம்.பி.பி.எஸ். இடங்களில் 3 சதவீத இடங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்படும்.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய 2,172 எம்.பி.பி.எஸ். இடங்களில், 65 இடங்கள் (3 சதவீதம்) மாற்றுத் திறனாளிகள் பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு மருத்துவத் தகுதியின் அடிப்படையிலும் கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையிலும் ஒதுக்கப்படும்.
விளையாட்டில் சிறந்து விளங்குவோர், முன்னாள் ராணுவ வீரர் வாரிசுகள்: விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு 3 எம்.பி.பி.எஸ். இடங்களும், முன்னாள் ராணுவ வீரர் வாரிசு பிரிவில் 2 எம்.பி.பி.எஸ். இடங்களும் 1 பி.டி.எஸ். இடமும் ஒதுக்கப்படும். அண்ணா பல்கலைக்கழகத்தில் வரும் 16-ஆம் தேதி விளையாட்டில் சிறந்து விளங்கும் மாணவர்கள் உள்ளிட்ட சிறப்புப் பிரிவினருக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.
அப்போது விளையாட்டுப் பிரிவுக்கு உரிய 3 எம்.பி.பி.எஸ். மாணவர்களை அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் குழு தேர்வு செய்து பெயர்களை மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்கு அனுப்பும்.
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கில் ஜூன் 17-ஆம் தேதி நடைபெறும் கலந்தாய்வில் விளையாட்டுப் பிரிவில் தேர்வு செய்யப்பட்ட 3 மாணவர்களுக்கும் அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர அனுமதிக் கடிதம் வழங்கப்படும்.
பொதுப் பிரிவினருக்கு...: அனைத்துப் பிரிவினர் (ஓ.சி.), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பி.சி.) உள்ளிட்ட பொதுப் பிரிவு மாணவர்களுக்கான எம்.பி.பி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வு சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கில் வரும் 18-ஆம் தேதி தொடங்குகிறது. ஜூன் 25-ஆம் தேதிக்குள் எம்.பி.பி.எஸ். முதல் கட்ட கலந்தாய்வை முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், தொடர்ந்து கலந்தாய்வை நடத்த மருத்துவக் கல்வி தேர்வுக் குழு முடிவு செய்துள்ளது.
அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும் சேர்த்து...: அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். இடங்களுடன் சேர்த்து, சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் சமர்ப்பித்துள்ள அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கும் வரும் 18-ஆம் தேதி முதல் முதல் கட்ட கலந்தாய்வு நடைபெறும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.
கட்-ஆஃப் மதிப்பெண் அடிப்படையில் தாங்கள் விரும்பிய அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காத நிலையில், சுயநிதி அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்தை மாணவர்கள் தேர்வு செய்வது வழக்கமாக உள்ளது.
No comments:
Post a Comment