Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Thursday, 12 June 2014

பள்ளிகளில் புதிய திட்டங்கள் - ஆலோசனையில் மத்திய அரசு

மதிய உணவுத் திட்டத்துடன், பள்ளிக் குழந்தைகளுக்கு கட்டாய பட்டர் மில்க் வழங்கும் நடைமுறையைக் கொண்டு வருவதற்கு எவ்வளவு செலவாகும் என்பதைப் பற்றிய மதிப்பீட்டைத் தரும்படி, மத்திய மனிதவள அமைச்சர் ஸ்மிருதி இரானி கேட்டுள்ளார்.

மேலும், புத்திசாலியான மாணவர்களுக்கு (ஆண், பெண் இருபாலரும்), மாவட்ட அளவில் தனி மாதிரி பள்ளிகளை திறக்கவும் மற்றும் வாரந்தோறும் சனிக்கிழமையை, பள்ளிகளில், விளையாட்டுத் தினமாக அறிவிக்கவும் ஆகும் செலவினங்கள் பற்றி மனிதவளத்துறை அமைச்சகம் கருத்து கேட்டுள்ளது.
இதுதொடர்பாக அமைச்சக வட்டாரத்தில் கூறப்படுவதாவது: பட்டர் மில்க், மருத்துவ ரீதியில், குழந்தைகளுக்கு நன்மை செய்வதால் அது பரிந்துரைக்கப்படுகிறது. எனவே, அதை குழந்தைகளுக்கு வழங்குவதற்கான செலவினம் கணக்கிடப்பட்டு வருகிறது.
மதிய உணவுத் திட்டம், 12.65 லட்சம் பள்ளிகளில் படிக்கும், 12 கோடி குழந்தைகளால் பயன்படுத்தப்படுகிறது. தமிழகம் மற்றும் கேரளா போன்ற மாநிலங்கள், மதிய உணவுத் திட்டத்தின் கீழ், பள்ளிக் குழந்தைகளுக்கு பால் வழங்குகின்றன. இதுதவிர, சில மாநிலங்கள், மாணவிகளுக்கு இரும்புச் சத்து மாத்திரைகளையும் வழங்குகின்றன.
மாதிரிப் பள்ளிகள்
புத்திசாலி மாணவர்களுக்கு, மாதிரிப் பள்ளிகளை அமைப்பது குறித்த செலவினங்கள் பற்றி ஆராய, நவோதயா வித்யாலயா சங்கதன் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதேசமயம், இந்த திட்டத்திற்கான யோசனை பழையது என்றாலும், கடந்த அரசுகளின் காலங்களில் இது நடைமுறைக்கு கொண்டுவரப்படவில்லை.
கடந்த ஆட்சியில், மொத்தம் 6,000 மாதிரிப் பள்ளிகள் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டன. அவற்றில் 3,500, அரசால் நடத்தப்படும் வகையிலும், 2,500, அரசு - தனியார் ஒத்துழைப்பின் மூலம் நடத்தப்படும் வகையிலும் திட்டமிடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
சனிக்கிழமை விளையாட்டு
சனிக்கிழமையை விளையாட்டு தினமாக அறிவிக்கும் திட்டத்தை, மனிதவள அமைச்சம் நடத்தும் பள்ளிகளில் முதல்கட்டமாக சோதனை செய்து பார்க்கலாம். பல பள்ளிகள், வாரத்தில் 5 நாட்கள் இயங்கும் நடைமுறையைக் கொண்டிருப்பதால், விளையாட்டிற்காக ஒதுக்கும் தினத்தில் வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது.
பெரும்பாலான கல்விக் கொள்கைகள், கல்வியும், விளையாட்டும் இணைந்து வழங்கப்பட வேண்டும் என்றே வலியுறுத்துகின்றன. ஆனால், நடைமுறையில், எதுவுமே அமல்படுத்தப்படுவதில்லை. விளையாட்டிற்கென்று ஒரு நாள் ஒதுக்கப்படும்போது, மாணவர்களிடையே நேர்மறை மாற்றங்கள் ஏற்பட்டு, அவர்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

No comments: