Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Monday, 23 June 2014

சமச்சீர் பாடத்திட்டத்தை முழுமையாக மாற்றியமைக்க வேண்டும்: ஆய்வில் பரிந்துரை

சமச்சீர் பாடத்திட்டத்தால் கல்வித்தரம் குறைந்துள்ளது. எனவே, இந்தப் பாடத்திட்டத்தை தரம் உயர்த்தும் வகையில் முழுமையாக மாற்றியமைக்க வேண்டும் என ஆய்வில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
சமச்சீர் பாடத்திட்டத்தின் தாக்கம் தொடர்பாக டான் பாஸ்கோ கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் மற்றும் "டேலன்ட் ஈஸ்' ஆகிய அமைப்புகள் சார்பாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
106 மாணவர்கள், 106 ஆசிரியர்கள், 109 பெற்றோர், 23 பள்ளி நிர்வாகிகள் என மொத்தம் 344 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த ஆய்வு முடிவுகளை டான் பாஸ்கோ பள்ளிகளின் தாளாளர் பாதிரியார் ஜான் அலெக்சாண்டர் சென்னையில் வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.

ஆய்வு முடிவுகளின் விவரம்:
மெட்ரிக் பாடத்திட்டம், ஆங்கிலோ இந்தியன் பாடத்திட்டம், சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் என இந்தப் பாடத்திட்டங்களோடு சமச்சீர் பாடத்திட்டங்களை ஒப்பிட்டபோது பெரும்பாலானோர் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம்தான் சிறந்தது என கூறியுள்ளனர்.
சமச்சீர் பாடத்திட்டத்தால் மாணவர்களின் சுமை குறைந்துள்ளதாக பெற்றோர், மாணவர், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் சராசரியாக 70 சதவீதத்துக்கும் அதிகமானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதேநேரத்தில், இந்தப் பாடத்திட்டம் மாணவர்களின் எதிர்காலத்துக்கோ, போட்டித் தேர்வுகளுக்கோ தயார் செய்வதற்கு உதவிகரமாக இருக்காது என அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
அனைவருக்கும் ஒரே மாதிரியான பாடத்திட்டம், மனப்பாடம் செய்யும் முறைக்குப் பதிலாக சிந்திக்கும் முறை போன்ற நல்ல அம்சங்கள் இருக்கின்றன. நல்ல நோக்கமாக இருந்தாலும் மிக மோசமான முறையில் அது செயல்படுத்தப்படுவதாக ஆய்வில் பங்கேற்றவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சமச்சீர் பாடங்களில் தமிழ் தவிர மீதமுள்ள பாடங்களின் தரம் மிகவும் மோசமாக உள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கம்ப்யூட்டர் அறிவியல், கணிதம், ஆங்கிலம் ஆகிய பாடங்கள் மிகவும் மோசமாக உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமச்சீர் பாடப்புத்தகங்கள் பல வண்ணங்களில் அச்சிடப்பட்டு பார்ப்பதற்கும், படிப்பதற்கும் நன்றாக உள்ளன. ஆனால், அந்தப் புத்தகங்களில் ஏராளமான இலக்கணப் பிழைகளும், எழுத்துப் பிழைகளும் உள்ளன.
இந்த பாடத்திட்டம் அவ்வப்போது ஆய்வுசெய்யப்பட்டு முழுமையாக தரம் உயர்த்தப்பட வேண்டும்.
அதேபோல், பாடத்திட்டத்தை நவீனப்படுத்தும்போது பள்ளிகள், ஆசிரியர்களின் கருத்துகள் கேட்கப்பட வேண்டும் என ஆய்வில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு முடிவுகளை வெளியிடும் நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் சஞ்சய் பின்டோ, "டேலன்ட் ஈஸ்' அமைப்பின் தலைமை செயல் இயக்குநர் லியோ பெர்னான்டஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments: