பிற மொழி கலப்பில்லாமல் தாய்மொழி பேசுவதைப் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும் என ஆளுநர் கே.ரோசய்யா வலியுறுத்தினார்.
சென்னையில் கடந்த 2 நாள்களாக நடைபெற்ற தினமணி தமிழ் இலக்கியத் திருவிழாவின் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் ஆளுநர் கே.ரோசய்யா பேசியது:
இந்த நிறைவு விழாவில் பங்கேற்பதற்கு நான் தமிழறிஞரும் இல்லை. தமிழ் மொழியை நன்கு அறிந்தவனும் இல்லை. இருந்தாலும் தமிழ்நாட்டுடன் எனக்கு இருக்கும் தொடர்பினாலும், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளுக்கு இடையே உள்ள தொடர்பினாலும் இந்த விழாவுக்கு என்னை அழைத்திருப்பதாகக் கருதுகிறேன்.
உலகம் முழுவதும் 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் மொழிகள் வரை இருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழ் மொழி தொன்மை வாய்ந்த செம்மொழிகளில் ஒன்றாகும். அதன் மொழி வளம் மிகவும் புகழ் பெற்றது. பயன்பாட்டுத் தொடர்பு அறுபடாமல் தொடர்ந்து வாழும் மொழியாக தமிழ் உள்ளது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கிய வரலாறைக் கொண்ட தமிழ் மொழி, பிற மொழி வார்த்தைகளை கிரகித்துக்கொள்ளும் தன்மையுடன் இருப்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். தமிழின் செழுமையான சொல்வளமும்,அவற்றின் ஒலி நயமும், அதைப் பேசும்போது தோன்றும் இன்பமும் அதன் சிறப்புகள் ஆகும்.
தினமணி என்றதுமே அந்த நாளிதழ் தமிழ் மொழிக்கு தரும் முக்கியத்துவமும், அதன் தேசிய பாரம்பரியமும்தான் நினைவுக்கு வருகின்றன. இந்த நாளிதழுக்கு டி.எஸ்.சொக்கலிங்கம், ஏ.என்.சிவராமன், ஐராவதம் மகாதேவன் போன்ற புகழ்பெற்ற அறிஞர்கள் ஆசிரியர்களாக இருந்துள்ளனர். இந்த தமிழ் இலக்கிய விழாவை நடத்தியுள்ளதன் மூலம் தினமணி புதிய வரலாற்றைப் படைத்துள்ளது. தினமணி மற்றும் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் வரலாற்றில் இது நிச்சயம் மைல் கல்லாக இருக்கும்.
தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு சென்னைப் பல்கலைக்கழகம் ஆற்றியுள்ள பணிகளும் பாராட்டத்தக்கவை. சென்னைப் பல்கலைக்கழகம், தினமணி என்ற இந்த இரண்டு நிறுவனங்களும் தமிழைப் பரப்புவதற்காக, தமிழின் புகழைப் பரப்புவதற்காக இணைந்துள்ளன. அவர்களது நோக்கம் வெற்றியடைய வாழ்த்துகள்.
நாடு முழுவதும் தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபடும் இலக்கிய அமைப்புகளை ஒன்றிணைக்கும் நோக்கத்தில் இந்த விழா நடத்தப்பட்டுள்ளது. தமிழறிஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், நாவலாசிரியர்கள், பத்திரிகையாளர்கள், தமிழார்வலர்கள் ஆகியோரை இந்த விழா ஒன்றிணைக்கும் என்பதிலும், தமிழால் அவர்கள் இணைவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
தாய்மொழியில் பேசும் பழக்கமும், அதில் புலமை பெறுவதும் சிறுவயதிலிருந்தே குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கப்பட வேண்டும். இதில் பெற்றோரும் மிக முக்கியமான பங்காற்றுவதோடு, தங்கள் குழந்தைகள் தாய்மொழியில் வெளியாகும் நாளிதழ்களையும், கதைப் புத்தகங்களையும் வாசிக்க ஊக்கப்படுத்த வேண்டும்.
நண்பர்கள், உறவினர்களிடையே தாய்மொழியில் பேசுவதையும், பிற மொழி கலப்பில்லாமல் தாய்மொழியைப் பயன்படுத்துவதையும் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார் ரோசய்யா.
No comments:
Post a Comment