"பி.இ., கலந்தாய்வு நடக்கும் வளாகத்திற்குள், குறிப்பிட்ட கல்லூரிக்கு ஆதரவாக, புரோக்கர்கள் யாராவது செயல்பட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,' என, அண்ணா பல்கலை துணைவேந்தர் ராஜாராம் தெரிவித்தார்.
பி.இ., சேர்க்கை கலந்தாய்வு, அண்ணா பல்கலை வளாகத்தில், துவங்கியது. விளையாட்டுப் பிரிவின் கீழ், 500 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கு, 4,000 க்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்தனர். ரேங்க் அடிப்படையில், முதல் நாளான ஜுன் 23ம் தேதி, 430 மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். முதல் 10 மாணவர்களுக்கு, இட ஒதுக்கீட்டுக்கான உத்தரவை, பல்கலை துணைவேந்தர், ராஜாராம் வழங்கினார்.
முதல் மூன்று பேர்
சென்னையைச் சேர்ந்த கத்ரீனா, அண்ணா பல்கலையின் கீழ் இயங்கும், கிண்டி பொறியியல் கல்லூரியில், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவை தேர்வு செய்தார். இவர், செஸ் வீராங்கனை. மற்றொரு சென்னை மாணவரான, ஆகாஷ், இதே கல்லூரியில், எலக்ட்ரிக்கல் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பிரிவை தேர்வு செய்தார். இவரும், செஸ் வீரர்.
மதுரையைச் சேர்ந்த ஸ்நேகா, டேபிள் டென்னிஸ் வீரர். இவரும், கிண்டி பொறியியல் கல்லூரியில், சிவில் பிரிவை தேர்வு செய்தார். இதன்பின் வந்த மாணவர்கள், வெவ்வேறு கல்லூரிகளை தேர்வு செய்தனர். இரண்டாவது நாளாக, இன்றும், விளையாட்டுப் பிரிவிற்கான கலந்தாய்வு நடக்கிறது; 460 பேர் அழைக்கப்பட்டு உள்ளனர். நாளை, மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வும், அதைத் தொடர்ந்து, 27ம் தேதியில் இருந்து, பொதுப்பிரிவு கலந்தாய்வும் நடக்கிறது.
புரோக்கர்களுக்கு எச்சரிக்கை
அண்ணா பல்கலை துணைவேந்தர், ராஜாராம், நிருபர்களிடம் கூறியதாவது: கலந்தாய்வுக்கு வரும் மாணவ, மாணவியருக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. கலந்தாய்வு நடக்கும் வளாகத்திற்குள், குறிப்பிட்ட கல்லூரிக்கு ஆதரவாக, புரோக்கர்கள் யாராவது, மாணவர்களிடம் கேன்வாசிங் செய்தால், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
வரும், 25ம் தேதி, மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடக்கிறது. மொத்த இடங்களில், இவர்களுக்கு, 3 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, 6,000 இடங்கள் உள்ளன. எனினும், 400 விண்ணப்பங்கள்தான் வந்துள்ளன.
தனியார் பொறியியல் கல்லூரிகளில் இருந்து, அதிகளவு இடங்கள், கலந்தாய்வுக்கு வழங்க வாய்ப்பு இல்லை. எனினும், எவ்வளவு இடங்கள் வருகின்றன என்பது, பொது கலந்தாய்வு துவங்கிய பின்தான் தெரியும். இவ்வாறு, ராஜாராம் தெரிவித்தார்.
No comments:
Post a Comment