தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்பில் சேர அனுமதிக் கடிதம் பெற்றுள்ள மாணவர்கள் ஜூலை 3-ஆம் தேதி தொடர்புடைய கல்லூரிக்குச் செல்ல வேண்டும் என மருத்துவக் கல்வி தேர்வுக் குழு அறிவுறுத்தியுள்ளது.
எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்பில் மாணவர்களைச் சேர்க்க கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி அரங்கில் கடந்த ஜூன் 17-ஆம் தேதி முதல் தொடர்ந்து ஆறு நாள்கள் நடைபெற்ற முதல் கட்ட கலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) முடிவடைந்தது.
கலந்தாய்வில் பங்கேற்க மொத்தம் 3,500 மாணவர்களுக்கு மேல் அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. 66 மாணவர்கள் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்கவில்லை.
சென்னை உள்பட 18 அரசு மருத்துவக் கல்லூரிகளின் 2,023 எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியின் 85 பி.டி.எஸ். இடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் 498 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் மாணவர்கள் சேர்க்கப்பட்டு ஒரு காலியிடம்கூட இல்லை.
அரசு மருத்துவக் கல்லூரிகள், அரசு பல் மருத்துவக் கல்லூரியில் சேர அனுமதிக் கடிதம் பெற்ற மாணவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவப் பரிசோதனைக்கு உரிய கல்லூரிக்கு வரும் ஜூலை 3-ஆம் தேதி செல்ல வேண்டும். சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்தில் சேர அனுமதிக் கடிதம் பெற்றுள்ள மாணவர்கள் ஜூலை 3-ஆம் தேதிக்குள் உரிய கல்லூரிக்குச் செல்வது அவசியம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment