அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளை அதிக அளவில் உருவாக்க வேண்டும் என்று விஐடி பல்கலைக்கழக வேந்தரும், இந்திய கல்வி மேம்பாட்டுச் சங்கத்தின் தலைவருமான முனைவர் ஜி. விஸ்வநாதன் கூறினார்.
திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை அவர் அளித்த பேட்டி:
ஒரு நாடு வளருவதற்கு அந்த நாட்டின் உயர்கல்வி வளர்ச்சி பெற வேண்டும்.
இந்தியாவில் அரசு மற்றும் தனியார் சேர்த்து 35 ஆயிரம் கல்லூரிகள், 700 பல்கலைக்கழகங்கள் உள்ளன. பொறியியல் துறையில் பெரும் வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன. ஆனால், மருத்துவத் துறையில் போதிய வாய்ப்புகள் இல்லை.
உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குப்படி நாட்டில் 6 லட்சம் மருத்துவர்கள், 12 லட்சம் செவிலியர்கள் தேவைப்படுகின்றனர். ஆண்டுக்கு 50 ஆயிரம் மருத்துவக் கல்வி இடங்கள் மட்டுமே உள்ளன. இதற்கு 5 முதல் 6 லட்சம் விண்ணப்பங்கள் குவிகின்றன.
தமிழ்நாட்டில் 3 ஆயிரம் இடங்களுக்கு 28 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
ரஷியா உள்ளிட்ட சுமார் 120 நாடுகளில் இந்திய மாணவர்கள் மருத்துவம் பயின்று வருகின்றனர்.
நாட்டின் பணம் வெளிநாடுகளுக்குச் செல்கிறது. 1991-இல் புதிய பொருளாதாரக் கொள்கைகள் அமலாக்கப்பட்டாலும், கல்வித்துறையில் இன்னும் அவை முழுமையாக செயல்பாட்டுக்கு வரவில்லை.
எனவே, மருத்துவப் படிப்புக்கான தேவையைக் கருத்தில் கொண்டு, அனைத்து மாவட்டங்களிலுள்ள அரசு மருத்துவமனைகளையும் தரம் உயர்த்தி மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க வேண்டும். தனியார் மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும்.
தனியார் கல்லூரிகளின் கட்டணங்களை அரசு முறைப்படுத்த முயற்சிப்பது தேவையற்றது. தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழங்களுக்கு மட்டுமல்ல, அரசுக் கல்லூரிகளுக்கும் தன்னாட்சி அந்தஸ்து வழங்க வேண்டும்.
பாடத்திட்டத்தை புதுப்பிக்க வேண்டும்.
பயிற்சி வழிப்பட்ட திறன்களைப் பெறுவதற்கான நடைமுறைகளை அதிகரிக்க வேண்டும். தொழிலகங்களுக்கும், கல்லூரிகளுக்கும் இடையே கலந்துரையாடல் அதிகரிக்கப்பட வேண்டும்.
புணேயில் வரும் 14-ஆம் தேதி எங்களது அமைப்பின் தேசிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெறவுள்ளது. அதைத் தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளுக்கு அளிக்க வேண்டிய பரிந்துரைகளை ஒழுங்குபடுத்தி மனுக்களாக அளிக்கவுள்ளோம் என்றார் விஸ்வநாதன்.
No comments:
Post a Comment